கொடைக்கானல் : கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பாபி சிம்ஹா மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதில் கான்ட்ராக்டர் ஜமீர்க்கும், பாபிசிம்ஹாவும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.
ஜமீரின் உறவினர் உசேனும், பாபி சிம்ஹாவும் நண்பர்கள். இப்பிரச்னையில் உசேன் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் பாபி சிம்ஹா, நண்பர் நடிகர் ராமசந்திரராஜ் மற்றும் சிலர் செண்பகனுாரில் உள்ள விடுதியில் வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உசேன் புகார் அளித்தார். பாபி சிம்ஹா, ராமசந்திர ராஜ் உட்பட 4 பேர் மீது கொடைக்கானல் எஸ். ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்தார். ஏற்கனவே கொடைக்கானலை சேர்ந்த ஜமீர், காசிம்முகமது, உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாபி சிம்ஹா புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பிலும் மாறி மாறி பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர்.