திருப்பதி,திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருமலையில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
இதன்படி, இந்தாண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து நேற்று முதல் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் மாலை நடந்தது.
கருட பட்டம்
திருமலை ஏழுமலையானின் வாகனமாக கருதப்படும் கருட பகவான், அவருக்கு கொடியாக விளங்குகிறார். அதனால் புதிய வெள்ளை பருத்தி துணியை மஞ்சளில் நனைத்து, அதில் இயற்கை காவி நிறம் கொண்டு கருடனின் உருவத்தை உபவாசம் இருந்து வரைந்தனர். அதன் பின், அந்த பட்டம் ஒரு வண்டியில் வைத்து கட்டி மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவிலை அடைந்தது.
கொடியேற்றம்
ஏழுமலையானுக்கு பிரம்மன் நடத்தும் விழாவான பிரம்மோற்சவத்தை காண, முப்பத்து முக்கோடி தேவர்களை வரும்படி நேரில் அழைக்கும் உற்சவம் கொடியேற்றம். கொடியேற்றத்தின் ஒரு பாகமாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி கோவிலில் கொடிமரம் அருகில் நேற்று காலை எழுந்தருளினார்.
பின், கொடிமரத்தில் நாமம், சங்கு சக்கரம் வரைந்து வஸ்திரங்கள், மலர்மாலைகள் சமர்பிக்கப்பட்டது. இதன்பின், பெரிய கஜமாலை கொண்டு வரப்பட்டு கருடன் படம் வரைந்த கொடி மலர்மாலையின் மீது சுற்றப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது தோட்டக்கலை துறையினரால் திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள புரோகிதர் சங்கத்தில் மலர் கண்காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டும் அதேபோல் தேவஸ்தானம் மலர்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய சேஷ வாகனம்
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக, நேற்றிரவு பெரிய சேஷ வாகனம் நடைபெற்றது.
பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பஸ்வாமி மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.