சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசியபோது, 'நாமெல்லாம் படிக்கக் கூடாது என்பதுதான் சனாதனத்தின் கொள்கை' என்றார். அதற்கு முன்பு, ஆகஸ்ட் மாத இறுதியில், துாத்துக்குடி மாவட்டத்தில், ஓர் கல்லுாரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, சபாநாயகர் அப்பாவு, 'இந்தியாவில், முன்பொரு காலத்தில், சனாதன தர்மத்தால் ஏழு சதவீத மக்கள் மட்டுமே கல்வி கற்க முடிந்தது' என்றார்.
சனாதனம் பெரும்பாலான மக்களுக்கு கல்வியை மறுத்தது என்ற கருத்தை, தி.மு.க., பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதோடு நிறுத்தாமல், 'கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் கல்வியை அனைவருக்குமானதாக ஆக்கினர்' என்ற கருத்தையும் பேசி வருகின்றனர். குறிப்பாக, அப்பாவு இதை திரும்பத் திரும்ப பேசி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அவர் திருச்சியில் பேசியபோது, 'கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் சமத்துவத்தை கொண்டு வந்தனர். திராவிட இயக்கம் என்பது, அவர்களது பணியின் நீட்சிதான். கத்தோலிக்க பாதிரியார்கள்தான் தமிழக வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
தமிழகத்துக்கான அடித்தளம் அவர்களால்தான் போடப்பட்து. கத்தோலிக்க பாதிரியார்கள் இல்லாமல் இருந்திருந்தால், தமிழகம் பீஹார் மாதிரி ஆகிப் போயிருக்கும்' என்றார்.
அதாவது, சனாதனம் கல்வியை மறுத்ததால், சமூகத்தில் சமத்துவம் இல்லாமல் போய் விட்டது. கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் அதை சரி செய்தனர். மேற்கண்ட கருத்துருவை, ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். எதற்காக... பிரித்தாளுவதற்காக; மதம் மாற்றுவதற்காக.
சுதந்திரம் கிடைத்த பின்னும், அரசியல் லாபத்திற்காக, தி.மு.க.,வும் இடதுசாரிகளும் இதே கருத்தை பரப்பி வருகின்றனர். கல்வி துறை, அவர்களின் பிடியிலேயே இதுவரை இருந்து வருவதால், மாணவர்களுக்கும் நம் பாரம்பரிய கல்வி முறை பற்றி தெரியாமலேயே போய் விடுகிறது.
காந்தியவாதியின் முயற்சி
கடந்த 1931ல், மகாத்மா காந்தி, வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில், இந்திய கல்வி பற்றி அவரிடம் கேட்டபோது, 'இப்போது இருப்பதை விட, முந்தைய காலங்களில் நன்றாக இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மோசமாகி விட்டது. இந்திய கல்வி முறை, அழகான மரம் போல இருந்தது. ஆங்கிலேயர்கள் அதை தோண்டி எடுத்துப் போட்டு விட்டனர்' என்றார்.
'உங்கள் கூற்றை நிரூபிக்க முடியுமா' என, ஆங்கிலேயர்கள் சவால் விட்டனர். சுதந்திர போராட்டத்தில் முழு வீச்சில் அவர் ஈடுபட்டு இருந்ததால், இந்திய கல்வி முறை பற்றி எழுத, அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
சுதந்திரத்திற்கு பின், காந்திய அறிஞர் தரம்பால், அந்த பணியை மேற்கொண்டார். பிரிட்டன் சென்று, இந்திய கல்வி பற்றி அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் திரட்டினார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நாடு முழுதும் கல்வி பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை திரட்டி, 'அழகிய மரம்;- 18ம் நுாற்றாண்டில், இந்திய பாரம்பரிய கல்வி' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதில் சொல்லி இருக்கும் தகவல்களை புரிந்து கொள்வதற்கு முன், ஆங்கிலேய ஆதிக்க காலகட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலேய ஆதிக்கம்
ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு 1680களில் வியாபாரிகளாக வந்தனர். 1750கள் முதல், பல்வேறு பகுதிகளில் உள்ளூர் ஆட்சியாளர்களோடு போர் தொடுத்தனர். அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவின் பெரும் பகுதி அவர்களின் ஆதிக்கத்திற்குள் வந்தது.
கடந்த 1813ல், கிழக்கிந்திய கம்பெனியின் பட்டயத்தை, பிரிட்டன் அரசு புதுப்பித்தது. அதில், 'கம்பெனி, இந்தியாவில் கல்விக்காக செலவிட வேண்டும்; இங்கு செயல்பட்டு வந்த கிறிஸ்துவ மிஷனரிகளை ஆதரிக்க வேண்டும்' என்று ஷரத்து விதிக்கப்பட்டது.
அப்போது, இந்தியாவில், மொத்தம் ஐந்து கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள் இருந்தன. இவை பெரும்பாலும், ஆங்கிலேயரின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டவை.
கல்வியில் செலவிடுவதற்காக, 1820களில் தொடங்கி, பல்வேறு கள ஆய்வுகளை, கம்பெனி நடத்தியது.
அதே நேரம், 1820களில் மிஷனரி பள்ளிகளை நிறுவ, கம்பெனி ஆதரவு கொடுத்ததால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
1835ல், ஆங்கிலேயர்களின் இந்திய ஆட்சிக் குழுவின் உறுப்பினராக இருந்த தாமஸ் மெக்காலே என்பவர், 'ஆங்கில கல்வி மட்டுமே, இந்தியாவில் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்ற கொள்கையை முன்வைத்தார்.
அதே ஆண்டு, 'இங்கிலிஷ் எஜுகேஷன் ஆக்ட்' என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதன் வாயிலாக, ஆங்கில வழி கல்விக்கு மட்டுமே, அரசு செலவு செய்யும் என, முடிவெடுக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில், பாரம்பரிய கல்வி நிறுவனங்களில், குறிப்பாக மதரசாக்களில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வழக்கம் இருந்தது.
பழைய ஆட்சியாளர்கள் இல்லாத நிலையில், 1835 சட்டம் வாயிலாக, ஆங்கிலேயர்கள் அதை முற்றிலும் நிறுத்தினர். 1882ல், 'ஹன்டர் கமிஷன்' என்ற ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அது, 'உள்ளூர் ஆட்சி அமைப்புகள் வாயிலாக, இந்திய மொழிகளில் அடிப்படை கல்வி அளிக்கலாம்' என்று பரிந்துரை செய்தது.
என்ன சொன்னார்கள்?
இப்போது, ஆங்கிலேயர்கள் தங்கள் கள ஆய்வுகளில், நம் கல்வி முறை பற்றி, என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.
நம் கல்வி முறை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்த காலத்தில், இந்திய ஆட்சியாளர்கள் பல பகுதிகளில் இல்லை. அவர்களின் கல்வி கொடை மறைந்து, 50ல் இருந்து 70 ஆண்டுகள் ஆகியிருந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வுகளில் ஆங்கிலேயரின் பார்வை சார்பு இருந்தது என்பதையும், அதனால், அவர்கள் இந்திய கல்வி முறையை பாராட்டவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், இவற்றில் இருந்து நமக்கு தெரிய வேண்டிய தகவல் என்ன?
சமூகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைத்ததா அல்லது சனாதனம் சில ஜாதியினருக்கு மட்டும் கல்வியை அனுமதித்ததா என்பது தான்.
மதராஸ் மாகாணம் பற்றிய ஆய்வுகளில் தெரியவருவதாவது...
* ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியாவது இருந்தது. பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தன
* இந்த பள்ளிகளில் படித்தவர்களில், 78 முதல் 90 சதவீதம் பிராமணர் அல்லாத மாணவர்கள்
* பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 8.60 முதல் 22 சதவீதம் வரை என, சராசரியாக 13 சதவீதமாக இருந்தது
* பிராமணர் அல்லாத உயர் ஜாதியினர் போக, பிற ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை, 70 முதல் 84 தசவீதம் வரை இருந்தது
* முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2.40 முதல் 10 சதவீதம் வரை இருந்தது.
எனவே, பிராமணர்களே கல்வியை கைப்பற்றிக் கொண்டு, பிற ஜாதிகளுக்கெல்லாம் அதை மறுத்து வந்தனர் என்கின்ற வாதம் தவிடு பொடியாகிறது.
ஸ்காட்லாந்து ஆவணக் குறிப்புகள், 'இந்துக்கள் அளவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை எனவும், கல்வி பெறுவதற்காக, அவர்கள் மற்ற அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள்' எனவும் குறிப்பிடுகின்றன.
இந்தியக் கல்வி மற்றும் கலாசாரம் பற்றி ஆய்வு செய்த, இலங்கை அறிஞர் ஆனந்த குமாரசாமி, 'பாரம்பரிய அமைப்புகள் சிதைக்கப்பட்டதால்தான் அனைத்து ஜாதியினரும் பரவலாகப் பெற்று வந்த சமநிலை குறைந்தது; அட்டவணை ஜாதிகள் என்று இப்போது அடையாளப் படுத்தப்பட்டு இருக்கும் மக்களின் தாழ்ந்த நிலைக்கு காரணமாக அமைந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் கல்வி
பிரிட்டனில் கல்வி என்பது மத ரீதியானதாக மட்டுமே நெடுங்காலமாக இருந்து வந்தது. அதுவும் லத்தீனில்தான் கல்வி வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகள், பாதிரியார்களை பயிற்றுவிப்பதற்காகத் தான் உருவாக்கப்பட்டன.
கிறிஸ்துவ சீர்திருத்தத்திற்கு பின், ஆங்கிலத்தில் பைபிள் வாசிக்கலாம் என்ற கொள்கை வந்த பின், 17 மற்றும் 18ம் நுாற்றாண்டுகளில்தான் ஆங்கிலத்தில் கல்வி என்று உருவானது. அதுவுமே மத ரீதியான கல்வியாகத்தான் இருந்தது. கல்வி முற்றிலுமே 'சர்ச் ஆப் இங்கிலாந்து' கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
தொழில் ரீதியான கல்வி அனைத்தும் குலக் கல்விக்கு ஒத்த முறையில் நடந்தது. ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. ஒரு தொழிலை கற்க, அந்த தொழில் சார்ந்தவரின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள், ஒருவரிடம் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.
கடந்த 1811ல், பொதுவான பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவற்றையும், சர்ச் ஆப் இங்கிலாந்து தான் தொடங்கியது. 'நேஷனல் ஸ்கூல்' என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த பள்ளிகளிலும், முதன்மை பாடம் பைபிளாக இருந்தது. பெரும்பாலான பள்ளிகளில், ஓரிரு ஆசிரியர்கள்தான் இருந்தனர்.
மூத்த மாணவர்கள், இளையவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறைதான் இருந்தது. வகுப்புகள் ஓரிரு மணி நேரம் நடத்தன. இந்த நிலை, 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. 1833ல் தான் ஏழைகளுக்காக இலவச பள்ளிகள் துவங்க வேண்டும் என்று, இங்கிலாந்து அரசு முடிவெடுத்தது. 1840க்கு பின்தான் பள்ளிகளில் அறிவியலும் ஆங்கில இலக்கியமும் பாடங்களாக சேர்க்கப்பட்டன.
எப்படி ஏற்பது?
பிரிட்டனில் நிலை இப்படி இருந்தபோது, அங்கிருந்து வந்த கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் இங்கு கல்வியை பரவலாக்கினர் என்றால், அதை எப்படி ஏற்க முடியும்?
மாறாக, இங்கு இருந்த அனைவருக்குமான கல்வி முறையை சிதைத்தனர். அதனால், இந்தியாவில் பரவலாக இருந்த எழுத்தறிவு வெகுவாக குறைந்து, 1891ல் வெறும் 6 சதவீதமானது.
அமெரிக்க அறிஞர் வில் துரந்த், 1930ல் எழுதும்போது, இந்தியக் கல்வி முறை ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட்டதனால், படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதமாக குறைந்து போனதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில், பெண்களின் பங்கு ஒன்றரை சதவீதம் மட்டுமே. அந்த கல்வியும் அதிக கட்டணம் வசூலித்த பின்னரே கொடுக்கப்பட்டது.
மெக்காலே வகுத்த ஆங்கில கல்வி முறை அறிமுகமான நுாறு ஆண்டு காலத்துக்குள், இந்தியாவில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது.
திராவிட - கம்யூனிஸவாதிகள் இனிமேலாவது, நம் தமிழகம் மற்றும் தேசத்தின் வரலாற்று உண்மைகளைப் படித்து தெரிந்து, ஐரோப்பியர்கள் சொல்லிக் கொடுத்த பொய்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் சொன்ன பொய்களை திரும்ப திரும்ப சொல்லி, தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும், சனாதன தர்மத்தின் வரலாற்றையும் இனிமேலும் மறைக்க முடியாது.

பேராசிரியர் ப.கனகசபாபதி,
தமிழக பா.ஜ., துணை தலைவர்