சென்னை:'திருவள்ளூர் அரசு பள்ளியில், மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளியில் படித்து வந்த 6ம் வகுப்பு மாணவி, அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டிய பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததுடன், மாணவிக்கு மனநிலை பாதித்து விட்டதாகக் கூறி அவமதித்துள்ளனர்; இது கண்டனத்திற்குரியது.
டாக்டர்கள் முன்னிலையில், மாணவி தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக, இந்த வழக்கின் விசாரணையை நேர்மையான, திறமையான அதிகாரிகளை கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.