பெங்களூரு- நமது எம்.பி.,க்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் சாசன சட்டத்தின் நகலில் மதச்சார்பற்ற, சோஷலிசம் வார்த்தை நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் சித்தராமையாவுக்கு, 'அம்பேத்கரின் அசல் அரசியலமைப்பை ஏன் வெறுக்கிறீர்கள்?' என, கர்நாடக பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் இருந்து புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு வந்ததை நினைவுகூரும் வகையில், எம்.பி.,க்களுக்கு அரசியல் சாசன புத்தகத்தை, மத்திய அரசு வழங்கியது.
பொறுமையின்மை
அதில் 'மதச்சார்பற்ற', 'சோஷலிஸ்ட்' என்ற வார்த்தைகள் கைவிடப்பட்டு, அரசியல் அமைப்பு சட்டத்தின் அசல் நகல் கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தில், முதல்வர் சித்தராமையா கூறுகையில், 'புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு வந்த எம்.பி.,க்களுக்கு வழங்கிய அரசியல் சாசன நகலில் இருந்து மதச்சார்பற்ற, சோஷலிசம் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. இது பா.ஜ.,வின் அரசியல் சாசனத்தின் பொறுமையின்மைக்கு சான்றாகும்.
'இது கண்டிக்கத்தக்கது. 1976ல் அரசியல் சாசனத்தில், 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அதை நீக்கி, 1949 அரசியல் அமைப்பின் நகலை வழங்கி, அவர்களின் எண்ணத்தை விதைக்க நினைக்கின்றனர். இது அம்பேத்கரை அவமானப்படுத்தும் செயல்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து, தங்களது 'எக்ஸ்' பக்கத்தில் கர்நாடக பா.ஜ., கூறியிருப்பதாவது:
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை, உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடாது என்ற விதி உள்ளதா; அம்பேத்கர் உருவாக்கிய அசல் அரசியல் அமைப்பை ஏன் வெறுக்கிறீர்கள்? அவர் உருவாக்கிய அசல் அரசியமைப்பில் மதச்சார்பற்ற மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகள் இல்லை.
வலுக்கட்டாயம்
நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து, அரசியல் சாசனத்தின் நோக்கத்தையே சிதைத்த உங்கள் தலைவர் இந்திரா, அரசியலுக்காக சோஷலிசம், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, வலுக்கட்டாயமாக சட்டத்தில் புகுத்தினார்.
நீங்கள் எப்போதுமே கேடயமாக பயன்படுத்தும் இவ்விரண்டு வார்த்தைகளும், அம்பேத்கர் உருவாக்கிய அசல் அரசியலமைப்பில் இல்லை.
இப்போது உங்கள் சோஷலிசத்தின் உண்மையான முகமூடி, உங்கள் சொந்த கட்சியினாலேயே பிரம்படி எடுக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் ஹிந்துக்களை அவமதிப்பதுடன், வெறுக்கிறீர்கள் என்பதும் நிரூபணமாகி உள்ளது. உங்கள் சோஷலிசம், மதச்சார்பின்மை முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியுடன் இணைந்து, பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசுக்கு, எப்படி மதச்சார்பற்ற கட்சியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.