கனிமொழியை காப்பாற்றும் அடுத்தகட்ட நடவடிக்கையை, காலதாமதம் செய்யாமல், மீண்டும் தி.மு.க., தலைமை துவக்கியுள்ளது. கனிமொழிக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கோர்ட் மறுத்து விட்டதால், டில்லி ஐகோர்ட்டின் கதவுகளைத் தட்டும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக, கனிமொழி தரப்பில் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழிக்கு, கடந்த 3ம் தேதி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் எப்படியும் ஜாமின் கிடைத்து விடும் என, பெரும் நம்பிக்கையுடன் தி.மு.க., இருந்தது.ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையில், கனிமொழிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. அத்துடன், ஜாமின் மறுக்கப்பட்டதற்கு, மிகவும் கடுமையான கருத்துக்களை நீதிபதி ஷைனி தெரிவித்திருந்தார். இது தி.மு.க., தரப்பை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மனு தாக்கல்: இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு கனிமொழியை ஜாமினில் கொண்டு வருவதற்கான, அடுத்தகட்ட நடவடிக்கையில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது. நேற்று டில்லி ஐகோர்ட்டில், கனிமொழி சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமின் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே விண்ணப்பித்த போது, கடந்த 20.6.2011ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், ஜாமின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யலாம் என்று, கூறப்பட்டிருந்தது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 439ன் கீழ், இதற்கான உரிமை மனுதாரருக்கு உள்ளதை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தீவிரமானவையா? சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவில், கனிமொழி செய்த குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், பொருளாதார குற்றங்களை இழைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் லஞ்சப் பணம் கைமாறியதில், கனிமொழிக்கும் தொடர்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே குற்றச்சாட்டுகள், கனிமொழி மீது சுமத்தப்பட்டு, சி.பி.ஐ., தரப்பிலும், கனிமொழி தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டு, அதன் பிறகு தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவை வழங்கியது. அதாவது, குற்றப்பத்திரிகை தாக்கலான பின், ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறியது.
மறுத்தது தவறு: கனிமொழிக்கு, சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் மறுத்தது மிகவும் தவறு. கனிமொழியின் குற்றங்கள் தீவிரமானவை. பொருளாதாரத்தை சீர்குலைத்தவை என்ற வாதங்களை எல்லாம் கேட்ட பிறகு தான், சுப்ரீம் கோர்ட் அத்தகைய உத்தரவை இட்டது எனும் போது, கனிமொழிக்கு ஜாமின் மறுப்பதற்கு அவற்றையே புதிய காரணங்களாக மீண்டும் சி.பி.ஐ., கோர்ட் சொல்வதை ஏற்க முடியாது.சி.பி.ஐ., தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தான் லலித். அவரே கூட "கனிமொழிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை இருக்காது' என்கிறார். தவிர, "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும், கனிமொழிக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை' என்றும் கூறுகிறார். "பிறர் மீது குற்றம் சாட்டப்படும் தீவிர பிரிவுகள் எதுவும் கனிமொழிக்கு பொருந்தாது' என்றும் கூறுகிறார். தவிர, கனிமொழி தொடர்பான விசாரணை எதுவும் நிலுவையில் இல்லை.
கலைஞர் "டிவி'யில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சாட்சிகளை கனிமொழி கலைப்பார் என்பது தவறு. தவிர, இவ்வழக்கில் இவர்கள் தான் சாட்சிகள். இந்த சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான், கனிமொழி தன் வாதத்தையே வைத்து வருகிறார். எனவே, சாட்சிகளை கலைக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ கனிமொழிக்கு இல்லை.இது தவிர, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கூட, கனிமொழி சாட்சிகளை கலைப்பார் என்று கூறவில்லை.கனிமொழி தொடர்ந்து சிறையில் இருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே, இவ்வாறு கனிமொழி சிறையில் இருந்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அவருக்கு ஜாமின் வழங்கிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெண் என்பதில் பாகுபாடு இல்லை':"இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 437ன் கீழ், பெண் என்ற சலுகையை காரணம் காட்டி, சமூகத்தின் மேல்தட்டு அந்தஸ்துடன் வாழும் கனிமொழி போன்றவர்கள் ஜாமின் கோருவதை ஏற்க இயலாது' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், தன் உத்தரவில் தெரிவித்தது. இதையும் நேற்று, கனிமொழி ஏற்க மறுத்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 437ன் கீழும் சரி, இந்த அரசியல் சட்டத்திலும் சரி, பெண் என்று மட்டும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அதில் பாகுபாடு ஏதும் காட்டப்படவில்லை. சமூகத்தின் எந்த அந்தஸ்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கும், இந்த சலுகை பொருந்தும். இதில், பாரபட்சம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தவிர, கனிமொழிக்கு ஒரு மகனும் உள்ளார். சிறுவரான அவர், தன் தாயைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு ஒரு தாயாக, கனிமொழி தன் கடமையைச் செய்தாக வேண்டியுள்ளது. எனவே, கனிமொழிக்கு ஜாமின் வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.கனிமொழி மட்டுமின்றி, கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரும், ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டில், ஜூன் 6லிருந்து 20ம் தேதி வரையில், வெறும் 14 நாட்களுக்கு மட்டும் தான் கலைஞர் "டிவி'யுடன் கனிமொழிக்கு தொடர்பே இருந்துள்ளது. குற்றம் நடந்ததாக கூறப்படும் காலங்களில் கனிமொழிக்கும், கலைஞர் "டிவி'க்கும் சம்பந்தமே இருந்ததில்லை. கடந்த ஆறு மாத சிறைவாசத்தின் போது கூட, கனிமொழியை விசாரணைக்கு சி.பி.ஐ., அழைக்கவில்லை. மேலும், சட்டத்தை மதிக்கும் பெண்மணி அவர். பார்லிமென்ட் உறுப்பினர்; நாட்டை விட்டு ஓடிவிடமாட்டார்.
- நமது டில்லி நிருபர் -