''குட்டை கட்டும் நிதியை ஆட்டை போட்டுட்டாங்க பா...'' என்றபடியே மசால் வடையை கடித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊர்லங்க...'' எனக்கேட்டார் அந்தோணிசாமி.
''காடுகளில் சுற்றித் திரியும் விலங்குகளின் தேவைக்காக, கசிவு நீர் குட்டைகளை அமைக்க வேண்டியது, வனத்துறையின் பொறுப்பு... இதுக்கான நிதியை அரசு கொடுக்குது பா...
''திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமடை காட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகிட்டே வரதால, அங்க கசிவு நீர் குட்டை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு...
''வனத்துறையின் பெரிய அதிகாரியின் அழுத்தம் காரணமா, நரியாப்பட்டு ஊராட்சி நிர்வாகம், 3.50 லட்சம் ரூபாய் செலவு செஞ்சு, கசிவு நீர் குட்டையை கட்டிக் கொடுத்துச்சு பா...
''அதுல வெறும், 50,000 ரூபாய் மட்டும் வனத்துறை அதிகாரி கொடுத்தாராம்... மீதி, 3 லட்சம் ரூபாயை தராம போக்கு காட்டிட்டு இருக்குறாரு பா...'' என்ற அன்வர்பாய், ''அட, வாங்க சீனிவாசன் சார், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு பெஞ்சில் இடம் அளித்தார்.
''தனிக்காட்டு ராஜாவான்னா செயல்பட்டுட்டு இருக்கார்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருன்னு சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அதிகாரியின் கொட்டம், கட்டுக்கடங்காம போயிட்டு இருக்கு ஓய்... சி.எம்.டி.ஏ.,வில் கட்டட அனுமதி வாங்காம கட்டப்பட்ட மற்றும் புதிதாக கட்டப்படற கட்டடங்களின் உரிமையாளர்களிடம், இவர் தலைமையில் வேலை பார்க்குற அலுவலர்கள் வசூலை வாரி குவிச்சுட்டு இருக்கா...
''இந்த பேரூராட்சி யில் வரி வசூல், வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கறது இல்ல... ஆனா, மின்சார உபகரணம், குடிநீர் குழாய் உதிரிபாகங்கள், சுண்ணாம்பு வாங்கினதா செலவு கணக்கை மட்டும், பக்கம் பக்கமா எழுதி தள்ளிடறா ஓய்...
''பருவமழை பாதிப்பு களை தவிர்க்க அரசு உத்தரவிட்டும், அதை பத்தியெல்லாம் கவலைப் படாம, கால்வாய் துார் வாருறது, கொசு மருந்து அடிக்கறதுன்னு எந்த வேலையையும் இவா செய்யறதே இல்ல...
''குப்பை அள்ள, மாவட்ட நிர்வாகம் வாங்கிக் கொடுத்த எட்டு, 'பேட்டரி' வாகனங்கள் ரெண்டு மாசமா பயன்படுத்தப்படாம துருப்பிடிச்சு கிடக்கு ஓய்...
''சுகாதார சீர்கேட்டில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நெம்பர் ஒன்னா இருக்கு... ஊர் ஜனங்க எல்லாம் மர்ம காய்ச்சல் வந்து, மருத்துவமனைக்கு படையெடுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எலே பாஸ்கர்... ஒரு சங்கதி சொல்லுதேன் வாலே...'' என, நண்பரை அழைத்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே மப்பேடு கேள்விப் பட்டு இருக்கீரா வே... அங்கன, அரசு ஆண்கள் விடுதி இருக்கு வே...
''அங்க தங்கி இருக்குற பெரும்பாலான கிராமத்து மாணவர்கள் தினமும் சென்னைக்கு போயி கல்லுாரியில் படிச்சிட்டு வாராவ... அவங்களுக்கு தினமும் காலை உணவு கொடுக்கிறதில்லையாம் வே... பல நாட்கள்ல இரவு உணவும் கிடையாதாம்... பெரும்பாலும் இந்த மாணவர்கள் பட்டினியா கிடக்காவ வே...
''விடுதிக்கான பாத்திரம், பொருட்கள் வாங்க, ஒவ்வொரு மாணவரிடமும் விடுதி பொறுப்பாளர் பணம் வசூல் செய்யுதாரு... ஆனா, 'கல்லுாரி விடுமுறை நாட்களில் நீங்களே சமைச்சு சாப்பிட்டுக்கிடுங்க'ன்னு சொல்லிருதாரு...
''யாராவது கேள்வி கேட்டா, உள்ளூர்க்காராள வச்சு மிரட்டுதாராம்... முதல் தலைமுறை பட்டதாரி கனவோட கிராமத்தில் இருந்து படிக்க வந்த மாணவர்கள் பட்டினி கிடந்து அவதிப்படுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''சரி, நான் போயி ஹரியை பாத்துட்டு வர்ரேன்...'' என குப்பண்ணா எழ, சபை கலைந்தது.