பா.ஜ., தலைமையில் புதிய கூட்டணி!
அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., தலைவராக எப்போது அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டாரோ, அன்று முதல் அவரின் பேச்சுகள் தான், அனைத்து ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. அவரது பேச்சு, பல தரப்பட்ட மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் விரும்பும் தலைவராக அண்ணாமலை இருக்கிறார்.
இவரது ஊழல் குற்றச்சாட்டுகள் அ.தி.மு.க., வினர் மீது பாய்ந்ததால், அவர்களே முன்வந்து கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
ஏற்கனவே, வலிமையான தலைமையில்லாத அ.தி.மு.க., ஆளுங்கட்சி யாக இருந்தும், 2019 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. எனவே, தற்போது, பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைத்து பெரும்பாலான இடங்களில் களமிறங்கினால், எதிர்பார்க்காத வெற்றி கிட்டும்.
மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி, மோடியின் தமிழ்ப்பற்று, அவர் தமிழகத்திற்கு செய்து வரும் நல்ல திட்டங்களை பார்த்து, தமிழக மக்கள் பா.ஜ., கூட்டணிக்கு அதிகளவில் ஓட்டு போடுவர் என்பதும் உறுதி. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் வேட்பாளராக, மோடிக்கு எதிராக இதுவரை எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரும் நம் கண்களுக்கு புலப்படவில்லை.
தற்போது சட்டசபையில் நான்காக உள்ள பா.ஜ.,வின் பலம், லோக்சபா தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை அடைய, பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால், வெற்றி சாத்தியமே.
இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ., வாங்கும் ஓட்டு சதவீதம், அடுத்து, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உதவியாக இருக்கும். இதுவரை தி.மு.க.,வுக்கு ஆதரவு தந்த சிறுபான்மையினர் ஓட்டுகள் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு செல்லவும், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டு போடவும் வாய்ப்பு உள்ளது.
எந்த பூனைக்கு யார் மணி கட்டுவது?
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத் தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆரணியை அடுத்த சேவூர் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவன் ஒருவன், சிகரெட் புகையை, மாணவியர் முகத்தில் ஊதியுள்ளான்.
அவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் கூறினர்; அவர்கள் அந்த மாணவனை பிரம்பால் அடித்து கண்டித்தனர்.
ஆசிரியர்கள் அடித்ததால் மாணவனுக்கு உடலில் காயம் ஏற்பட்டதாக,
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகக் கூறி, காவல் துறையில் புகார் கொடுத்த
மாணவனின் பெற்றோர், பள்ளியிலும் புகார் கொடுத்ததால், அப்பள்ளியில் இரண்டு
ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு
ஆசிரியர்கள், நிர்வாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவன், தலையில் அதிக முடியும்,
தாடியும் வைத்து, பள்ளிக்கு வந்து உள்ளான். அவனை அப்பள்ளி தலைமை ஆசிரியர்
சிவப்பிரகாசம் கண்டித்துள்ளார்; மனமுடைந்த மாணவன், தற்கொலை செய்து
கொண்டான். இதன் காரணமாக, பள்ளியின் தலைமை ஆசிரியர், தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டார்
மற்றொரு பள்ளியில், தாமதமாக வந்த மாணவியை,
ஆசிரியை வகுப்பறைக்கு வெளியில் முட்டி போட வைத்ததால், அந்த மாணவி தற்கொலை
செய்து கொண்டார். இதன் காரணமாக, அப்பள்ளியின் ஆசிரியை, இடை நீக்கம்
செய்யப்பட்டார்
மற்றொரு பள்ளியில், இரவில் வெளி நபர்கள் மது
குடித்து, மது பாட்டில்களை பள்ளிக்குள்ளேயே விட்டுச் சென்றதால், அப்பள்ளி
ஆசிரியர்கள், தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
மாணவர்களின் போக்கிரித்தனமும், மன பலம் இல்லாத பாங்கும் ஆசிரியர்களைத் தான் பதம் பார்க்கின்றன.
மாணவனை
நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் என்று கூறுவோர், ஒரு
விஷயத்தை கவனிக்க வேண்டும்... அறநெறி வகுப்புகள் இப்போது கிடையாது;
விளையாட்டு வகுப்போ, மாணவர்களுடனான கலந்துரையாடல் வகுப்போ கிடையாது.
இதை
விடுங்கள்... பல குடும்பங்களில், பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்று
விடுவதால், வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள
யாரும் இருப்பதில்லை. அதனால் அவர்கள் மனம் போன போக்கில் வாழ்க்கையை
அமைத்துக் கொள்கின்றனர். சில பெற்றோர், தங்கள் அரசியல் பின்புலத்தை வைத்து,
பள்ளியையே மிரட்டுகின்றனர்.
பிரச்னையை எப்படி தீர்ப்பது? வழி
கண்டுபிடிக்க அரசு தான் முனைய வேண்டும்; ஆனால், அதுவும் அரசியல் செய்வதில்
பெரும் நேரத்தைச் செலவிட்டு, மாணவரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான
கவனத்தைச் செலுத்துவதில்லை.
எந்த பூனைக்கு, யார் மணி கட்டுவது?
தப்பு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்குவதா?
இ.ஐசக் ராஜா மனோகர், தர்மபுரியில் இருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: 'இந்திய இசைக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் மீது, பா.ஜ.,வினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்' என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நந்தா திரைப்படத்தில், திருடன் பாத்திரத்தில் நடித்த காமெடி நடிகர் கருணாஸ், நீதிமன்றத்தில் ஒரு வசனம் பேசுவார். அதாவது, 'வண்ணாரப் பேட்டையில ஒரு உள்பாவாடை காணாம போனாக் கூட, நேரா என்னை வந்துதான் பிடிக்கிறாங்க யுவர் ஆனர்' என்பார். அதைக் கேட்டு நீதிமன்றமே சிரிக்கும். அப்படி ஒரு காட்சி தான், தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில், சரியான திட்டமிடல் இல்லாததால், போக்குவரத்து நெரிசலில் பலரும் சிக்கித் தவித்தனர்; இதில், முதல்வர் ஸ்டாலினும் தப்பவில்லை.
'நொங்கு தின்னவன் ஓடிட்டான்... நோண்டித் தின்னவன் மாட்டிக்கிட்டான்' என்ற கிராமத்து சொலவடைக்கு ஏற்ப, தனிப்பட்ட சிலரது லாபத்திற்காக பல ஆயிரம் பேரை திணறடித்தது ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசைக்குழு.
இதற்கு வக்காலத்து வாங்கும், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பா.ஜ., கட்சியை கண்டிப்பது எந்தவிதமான அரசியல் பாணி என்றே தெரியவில்லை.
அவரவர் நம்பும் கடவுள்களே நடுரோட்டில் வந்து அமர்ந்தாலும், போக்கு வரத்து நெருக்கடியை, 'டிராபிக் ஜாம்' என்றுதானே சொல்ல முடியும். அதை விடுத்து, போக்கு வரத்து நெருக்கடியை சுட்டிக்காட்டியவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை சுமத்துவது, ஏற்க முடியாத வாதம்.
முஸ்லிம் தேசமான துபாயில், இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை கடுமையானது என்பதை அறிந்தும், ஜவாஹிருல்லா போன்றவர்கள் இவ்வாறு வக்காலத்து வாங்குவது ஏன்? ஒருவேளை, 'இது இந்தியா தானே' என்ற அலட்சியமாக இருக்குமோ?