அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கருப்பணன்: பா.ஜ., வுடன் கூட்டணி வேண்டாம் என எங்கள் கட்சி அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரியுமா... 2024 லோக்சபா தேர்தலின் போது, மோடி மீண்டும் பிரதமராக, அ.தி.மு.க., ஆதரவளிக்க வேண்டுமாம். பின், 2026 சட்டசபை தேர்தலின் போது அண்ணாமலையை முதல்வராக்க ஆதரவு அளிக்க வேண்டுமாம். இப்படி கூறும், பா.ஜ.,வுடன் எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?
டவுட் தனபாலு: 'அண்ணா துரை, ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததால தான், பா.ஜ.,வுடன் கூட்டணியை முறிச்சிக்கிட்டோம்'னு, அங்க முனுசாமி கரடியா கத்திக்கிட்டு இருக்காரு... இவரோ, இப்படி கூட்டத்துல கட்டு சோத்தை அவிழ்த்து, கட்சி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., துணை பொதுச் செயலர், கே.பி.முனுசாமி: பண்ருட்டி ராமச்சந்திரன், ஊடகங்களில் எங்களை நம்பிக்கை துரோகிகள் என்கிறார். அவர், பல கட்சிகளில் பயணித்தாலும், எங்கும் அவர், யாருக்கும் நம்பிக்கையாக இருந்ததில்லை; நம்பிக்கை துரோகத்தின் உச்சம் தான் அவர்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வில் துவங்கி, சர்வ கட்சிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, கடைசியா, பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரா ஆகி இருக்கார்... மூத்த அரசியல்வாதியா இருந்தாலும், ஒரு இடத்திலும் நிலையா அவர் இல்லாததால, உங்க விமர்சனத்தில் பலருக்கும் உடன்பாடு இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பீஹாரில் செயல்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக்: உதட்டில், 'லிப்ஸ்டிக்' பூசிக் கொண்டும், தலையில், 'பாப் கட்' முடிதிருத்தம் மேற்கொள்ளும் பெண்களுக்காக தான் பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு பதில், மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாய பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: சனாதனம் பற்றி விமர்சித்து, 'இண்டியா' கூட்டணிக்கு உதயநிதி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தின மாதிரி, இவர் பங்கிற்கு, பெண்களை கிண்டலடித்து புதுசா சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கார்... தேர்தல் முடியுறதுக்குள்ள உங்க கூட்டணியில் பல பேர் இப்படி, 'காமெடி தர்பார்' நடத்துவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!