ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வறண்ட பகுதியில் ஊருணியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை தனி நபராக அகற்றி அங்கு 800க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து பசுமை வனச்சோலையாக மாற்றியுள்ளார் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன்.
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறண்ட பகுதி என்ற எண்ணம் தான் அனைவரிடமும் இருக்கும். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் சீனிவாசன். பொருளாதார குற்றப்பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளார். தொடர்ந்து பொது நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். மரங்களில் விளம்பர பலகைகளுக்காக அடிக்கப்படும் ஆணிகளை அகற்றி முழுமையாக மரங்கள் வாழ வழி செய்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியின் சேதுபதி ஊருணி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதராக காணப்பட்டது. 2019 ல் சுபாஷ் சீனிவாசன் தனிப்பட்ட மனிதராக களம் இறங்கினார். தினமும் அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும் இரவு 7:00 முதல் 9:00 மணி வரையிலும் சீமைக்கருவேல மரங்களை ஊருணியிலிருந்து அப்புறப்படுத்தினார்.
பின்னர் அப்பகுதியில் வேலிகள் அமைத்து ஊருணியின் கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். சீமைக்கருவேல முள் மரங்கள் அடர்ந்த பகுதி தற்போது பசுமை சோலையாக மாறியுள்ளது. இதில், புங்கை, மா, பலா, ஆல், அத்தி, வேம்பு, அரசு, கொடுக்காப்புளி, தென்னை, ஈச்சை, வாகை, ஆவி, நீர்மருது, வாகை என பல்வேறு மரங்களை வளர்த்துள்ளார். ஊருணி அருகே நர்சரி பண்ணையும் அமைத்துள்ளார்.
சுபாஷ் சீனிவாசன் தெரிவித்ததாவது: காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நமக்கில்லாவிட்டாலும் நமது சந்ததிகள் இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதைவலியுறுத்தி தொடர்ந்து மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கவுள்ளேன். ஆயிரம் பனை விதைகள் சேகரித்துள்ளேன். இவற்றை ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்த பவுன்டேஷன் மூலம் பிரம்ம தீர்த்த குளத்தின் கரைகளில் நடவு செய்யவுள்ளனர் என்றார்.