நாட்டின் வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம் அணுமின் நிலையம்

Added : நவ 06, 2011 | கருத்துகள் (63)
Advertisement
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு படிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் தீராத ஆவல், விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் தான் இது போன்ற சாதனைகளைப் படைக்க முடியும். தகவல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் நாம், அத்தொழில் நுட்பம் மேலும், தங்கு தடையின்றி தொடர, மின்சாரத்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு படிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் தீராத ஆவல், விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் தான் இது போன்ற சாதனைகளைப் படைக்க முடியும்.

தகவல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் நாம், அத்தொழில் நுட்பம் மேலும், தங்கு தடையின்றி தொடர, மின்சாரத் தேவையும் அவசியம் என்பதை உணர வேண்டும். மின் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றாக் குறையாக உள்ள இக்காலகட்டத்தில், அணுசக்தி மூலம் இதனை சரிக்கட்ட முடியும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. நல்ல வேளையாக, தமிழகத்தில், கூடங்குளத்தில் அமையவுள்ள அணுமின் நிலையம் மூலம், நமது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை, நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணுசக்தி என்றாலே ஏதோ ஒருவித பயம் பலரிடம் குடிகொண்டுள்ளது. ஆனால், எதிர் நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்பதை நம்பும் நாம், அதே துணிச்சலுடன் புதிய முயற்சிகளையும் வரவேற்க வேண்டும். பாதுகாப்பான அணு மின் நிலையங்களால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று பலரும் கூறியுள்ள நிலையில், உண்மை, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் வடிவமான நம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனையே வலியுறுத்தியுள்ளார். அணுமின் நிலையம் மற்றும் அதுதொடர்பாக அவரது கருத்துக்கள் இதோ....


தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, அணுஉலை செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின்
நன்மைகளைப் பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தங்களது அறிவாற்றலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது.


அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன? அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்திதான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது.கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு (Dynamics of Geo&political and Market forces),, நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம் என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.


மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகளை தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.


எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்ப் போம்.
1.ஜப்பான் புகுஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாய மாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.
2.இயற்கை சீற்றங்களினால் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவை வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
3.அணுசக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.
4.அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்தத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.
5.அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்
படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.
6.10,000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை
7.பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.


இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளன, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெ ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஓரம் அமைந்துள்ள எல்லா அணுதி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.


அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றியும் அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்ய செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன். அத்துடன் என்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்ச்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக வும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களையும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் தி. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா


2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ததன் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தக்காலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1Century AD) கல்லணை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லணையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தாலோ கல்லணை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவத்துறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதெரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.


ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம்.


தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.


முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது. இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம்.


Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
keeran - ja,இலங்கை
01-டிச-201120:34:56 IST Report Abuse
keeran ஆபத்து 100 % தமிழருக்கு; தண்ணீர் 100 % தமிழரிடமிருந்து;மின்சாரம் 50 % தமிழருக்கு;வேலைவாய்ப்பு 2 % தமிழருக்கு; இதைவிட சிறந்த பேரம் தமிழருக்கு கிடைக்குமா?
Rate this:
Cancel
raahan - Seoul,தென் கொரியா
01-டிச-201107:33:59 IST Report Abuse
raahan என்ன தான் இவர்கள் நாடு நாடு எதிர்காலம் என்று சொன்னாலும் நன்றாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. இங்கே போராட்டம் செய்பவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதில் எத்தனை பேர் ஒரே ஒரு குழந்தை பெற்று இருக்கிறாக்கள்? மக்கள் தொகை என்பது கட்டுக்குள் இருக்கிறதா? நtட்டு மீது பற்று என்று சொல்பவர்கள் எத்தனை பேர் இதை நினைக்கிறார்கள். இதுவும் அரசியல் அல்லது சுய லாபம் நோக்கம் ஒன்றே வேறு எதுவும் இல்லை. மக்கள் நாடு என்று சொல்வது உண்மையானதாக இருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் உண்மையாக இருக்க வேண்டும். அதுவே வேண்டும்
Rate this:
Cancel
Dhanasekaran - Toronto,கனடா
28-நவ-201107:01:10 IST Report Abuse
Dhanasekaran ரொம்ப நல்ல கருத்து. ஜப்பானையும் இந்தியாவையம் ஒப்பிடக் கூடாது. உலகத்திலயே ஜப்பானில் தான் நில நடுக்கம் அதிகம். அதே நில நடுக்கம் இந்தியாவிலும் வரும் என்று சொல்லி இந்த அணு நிலையத்தை எதிர்ப்பது முட்டாள்தனம். முதலில் அந்த மூன்று நபர்களையும் ஜெயிலில் போட்டு விட்டு உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X