ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று (அக்.,4) ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 4*400 மீ., ஓட்டத்திலும் இந்தியா தங்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இரட்டைப் பதக்கம்
ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். கிஷோர் ஜெனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஓட்டத்தில் தங்கம், வெள்ளி
4*400 மீ., ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. மகளிர் அணி வெள்ளி வென்றது.
வெண்கலம்
இன்று நடைபெற்ற 35 கி.மீ கலப்பு நடைப்போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி, பாபு ராம் இணை 5 மணி நேரம் 51 நிமிடங்கள் 14 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றது.
இறுதி போட்டியில் இந்தியா
ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை 5-3 எனற கோல்க்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், மேலும் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளது.
வில்வித்தை
கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவின் ஜோடி, 159 புள்ளிகள் பெற்று கொரியா ஜோடியை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
பாட்மின்டன்

மகளிர் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியா வீராங்கனை பட்ரி குசுமா வர்தனியை 21-16, 21-16 என்ற நேர் செட்டில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
குத்துச்சண்டை:
குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை பெண்கள் 54-57 கிலோ பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பர்வீனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - மலேசியா மோதின இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெண்கலமும், 800 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளியும் கிடைத்தது. 5 ஆயிரம் மீ., ஓட்டப் போட்டியில் இந்திய வீரர் அவினாஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பதக்கப்பட்டியல்
தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.