கொஞ்சம் அறியலாம்...கோவை வரலாறு

Updated : நவ 12, 2011 | Added : நவ 12, 2011 | |
Advertisement
பூளைமேட்டின் 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நன்னாளில், கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கும் தார்மிகக்கடமை; இங்கேயே பிறந்து வளர்ந்தும் இந்த நகரின் சரித்திரம் அறியாதவர்களுக்கும், எங்கோ பிறந்து இங்கே வந்து குடியேறியவர்களுக்காகவும் இதோ! கோவையின் வரலாற்றுச் சுருக்கம்...வரலாறு என்பது கடந்த காலம் உறைந்து கிடக்கும் பெட்டகம்.

பூளைமேட்டின் 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நன்னாளில், கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கும் தார்மிகக்கடமை; இங்கேயே பிறந்து வளர்ந்தும் இந்த நகரின் சரித்திரம் அறியாதவர்களுக்கும், எங்கோ பிறந்து இங்கே வந்து குடியேறியவர்களுக்காகவும் இதோ! கோவையின் வரலாற்றுச் சுருக்கம்...
வரலாறு என்பது கடந்த காலம் உறைந்து கிடக்கும் பெட்டகம். மனித இனத்தின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும், வாழ்வுக்கும், தாழ்வுக்கும் சான்றாக இருப்பது வரலாறுகள்தான். ஒரு நாட்டின் வரலாறு, ஒரு குடும்பத்துக்கு எழுதப்படும் ஆவணத்தைப் போல உண்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் மொழியறிஞர் பாவாணர்.
பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழகத்தின் தொன்மையான வரலாற்றையும் பல்லாண்டுகள் ஆய்வு செய்து 1929 ல் முதன் முதலாக தமிழக வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர் பி.டி சீனிவாச ஐயங்கார். அவர் தனது நூலில் தமிழர்கள்தான் இந்தியாவின் மூத்தகுடிகள் என்கிறார்.
இந்தியாவின் வரலாறு வடக்கில் இருந்து எழுதப்பட கூடாது; தென்முனையில் இருந்து எழுதப்பட வேண்டும்; அதுவே உண்மையான வரலாறாக அமையும் என்னும் மனோன்மணீயம் சுந்தரனாரின் கருத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித் ஏற்றுக்கொள்கிறார். கொங்கு நாட்டைப் புறக்கணித்துவிட்டு தமிழக வரலாறை எழுத முடியாது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.
கொங்கு மண்ணின் வரலாற்றை எழுதியவர்களில், முதன்மையானவர் கோவைக்கிழார் என்றழைக்கப்படும் சி.ம.ராமச்சந்திரன் செட்டியார். "இதுவோ எங்கள் கோவை' "இதுவோ எங்கள் நாட்டுப்புறம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியதன் வாயிலாக கோவை வரலாற்றை சிறப்பாக ஆவணப்படுத்தியவர் இவர்.
"கொங்கு தமிழக வரலாறு' எழுதிய கா.அப்பாத்துரை, "கொங்கு நாட்டு வரலாறு<; துளு நாட்டு வரலாறு' நூலை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி, பூளைமேடு வரலாறு எழுதிய அ.கி. நாயுடு, கொங்கு நாட்டு கல்வெட்டுகள் பற்றி எழுதிய ஆய்வறிஞர் ராசு, சூலூர் வரலாற்றை எழுதிய செந்தலை கவுதமன், சமகால வரலாற்றை பதிவு செய்துள்ள கவியன்பன் பாபு, சி.ஆர். இளங்கோவன், பா. மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் கோவை வரலாறை எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.
கொங்கு நாட்டின் வரலாற்றை முதன் முதலில் எழுதிய அ.தி.முத்துசாமி கோனார், பொதுவான வரலாற்று பார்வையிலிருந்து வேறுபட்டு "கொங்கு நாடு தனி நாடு' என்கிறார். இன்றைய கோவை, கொங்கு நாட்டின் ஐந்தில் ஒரு பகுதிதான். கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர்,தர்மபுரி ஆகிய மாவட்டங்களும், மைசூர் தலைக்காடு, திருச்சி குளித்தலையையும் உள்ளடக்கியதுதான் கொங்குநாடு.
மேற்கே வெள்ளியங்கிரி மலை (மேற்கு தொடர்ச்சி மலை) வடக்கே தலைக்காடு (கோபி) தெற்கே வாகையூர் (பழனி) ஆகியவை கொங்கு நாட்டின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பேரூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து பேரூர் நாடு என்று அழைக்கப்பட்டது.
இதில், ஒரு கிராமமாக இருந்ததுதான் இன்றைய கோவை. கோவன் என்ற இருளர் தலைவனின் ஆளுகையின் கீழ் இந்நிலப்பகுதி இருந்ததால் கோவன்பதி என்றும், கோவன்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் திரிந்து கோயமுத்துர் ஆனது. பேரூர் நாட்டை கேக்கண்டன் ரவி என்ற சேர மன்னன் ஆண்ட போது, மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் கொங்கு நாட்டை வென்று பேரூர் நாட்டையும் கைப்பற்றினான்.
பின்னர் தலைக்காட்டுக் கங்கர்கள் கைப்பற்றினர். கி.பி., 7 ம் நூற்றாண்டுக்கு பிறகு கங்கர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சோழர்கள், கொங்கு சோழர்கள் என அழைக்கப்பட்டனர். கி.பி., 13 ம் நூற்றாண்டுக்கு பிறகு கொங்கு நாடு பாண்டியர்களின் வசமானது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு பின் ஒய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனரும், மைசூரின் கண்டிகர்களும் ஆண்டனர்.
அதன் பின் விஜய நகர பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி., 16 ம் நூற்றாண்டில் கோவை, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது; 18ம் நூற்றாண்டுக்கு பிறகு பேரூர் நாடு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்டது. 1799 ல் நடந்த நான்காம் மைசூர் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்ட பிறகு கோவை முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தன.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் கோவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து. 1805 ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோவை அதன் தலைநகரமானது. 1866 ல் கோவை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் முதல் தலைவராக மெக்ரிகர் இருந்தார். 1888 ல் ஸ்டேன்ஸ் மில் துவங்கப்பட்டது. 1914 வரை இங்கு 3 மில்கள் மட்டுமே இருந்தன.
கோவை பகுதிகளில் பருத்தி விளைச்சல் அதிகமானதாலும், இங்குள்ள தட்ப வெப்ப நிலை நூற்பாலை தொழிலுக்கு ஏற்றதாகவும் இருந்ததாலும், பைக்காரா மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் அதிகம் கிடைத்ததாலும் பல நூற்பாலைகள் இங்கு தோன்றின. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்குவது போல் கோவை இத்தொழிலில் சிறந்து விளங்கியதால் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என பெயர் பெற்றது கோவை.


பீளமேடு...வளர்ச்சியின் வரலாற்று பாதை


1711 நவ. 11 -பீளமேடு பிறந்த நாள்
1911 ஜன. 25 -பீளமேட்டில் ரங்கவிலாஸ் பஞ்சு அரவை ஆலை(ஜின்னிங் தொழிற்சாலை) துவக்கம்.(பின்னர் 1922ல் இது ரங்கவிலாஸ் நூற்பாலையாக உயர்ந்தது)
1924 ஜூன் 4 -சர்வஜன உயர்நிலை பள்ளியை மேல்சபை உறுப்பினர் வேங்கடரமண அய்யங்கார் துவங்கி வைத்தார்.
1926 ஜூன் 14 -பி.எஸ்.ஜி., அறநிலையத் துவக்க விழா. பி.எஸ்.ஜி., தொழிலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா.
1929 ஆக. 13 -பி.எஸ்.ஜி., தொழிலகத் தொழிற்பயிற்சி பிரிவு துவக்கம்.
1939 ஜூலை 15 -பி.எஸ்.ஜி., பல் தொழில்நுட்பக்கல்லூரி(பாலிடெக்னிக்) தமிழ்நாட்டில் முதல் பாலிடெக்னிக் இது.
1945 -சர் ஆர்தர் ஹோப் "ஹோப் காலேஜ்' துவங்கினார்.
1947 ஆக. 11 - பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி துவக்கம். கோவை மாவட்டத்தின் முதல் தனியார் கல்லூரி இது.
1948 - அறிவியல் தமிழ் மாத இதழான "கலைக்கதிர்' வெளிவர துவங்கியது.
1951 ஜூலை 16 - பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி துவக்கம். தமிழ்நாட்டின் முதல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி இது.
1956 ஜூன் 4 - பி.எஸ்.ஜி., அர. கிருஷ்ணம்மாள் பள்ளி செயல்பட துவங்கியது.
1985 செப். 30 -பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி துவக்கம்.
1989 -பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவக்கம்.
அண்ணல் காந்தியடிகள், இந்திய குடியரசு தலைவர்களான டாக்டர். ராஜேந்திர பிரசாத், டாக்டர். ஜாகீர் உஷேன், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சர்.சி.வி., ராமன், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் ஆகியோர் பீளமேடு வருகை தந்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கோர்.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X