புதுடில்லி:மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் தலைவர்கள் உறுதியளித்தாலும், அந்நாட்டு அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மும்பையில் கடந்த 2008, நவம்பர் 26ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரோடு பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே.இந்த சம்பவத்தை அரங்கேற்றிய லஷ்கர் -இ- தொய்பா நிறுவனர் சையத் ஹபீஸ் சயீத், இன்னும் பாகிஸ்தான் மண்ணில் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேர் குறித்த ஆதாரங்களை மத்திய அரசு, பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததின் பேரில், ராவல்பிண்டி கோர்ட்டில் இவர்கள் மீது வழக்கு நடக்கிறது.
மும்பைத் தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு, பிரதமர் மன்மோகன் சிங்கும், அந்நாட்டு பிரதமர் கிலானியும் மூன்று முறை சந்தித்து பேசி விட்டனர். இருநாட்டு உள்துறை அமைச்சர்கள் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். இதே போல, வெளியுறவு அமைச்சர்களும் மூன்று முறை சந்தித்துள்ளனர். "மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, இந்த சந்திப்புக்களின் போது அந்நாட்டு தலைவர்கள் உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவ வழக்கை விசாரித்து வரும் ராவல்பிண்டி கோர்ட்டில், இதுவரை ஐந்து நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். எனினும், இந்த வழக்கு விசாரணையில் உரிய தீர்வு எட்டப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE