பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட் வளாகத்தில் இளம்பெண் வக்கீல் ஒருவரை, ஆண் வக்கீல் ஒருவர் கத்தியால் குத்தி, கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா ஐகோர்ட்டின் முதல் மாடியிலுள்ள அறை எண் 4 பகுதியிலுள்ள கழிப்பறை அருகில் இன்று மதியம் 1.45 மணியளவில், பெண் வக்கீல் நவீனா (25), வக்கீல் ராஜப்பா என்பவரும் பேசி கொண்டிருந்தனர். திடீரென நவீனாவின் கழுத்து, மார்பு பகுதியில் ராஜப்பா கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த நவீனா, சம்பவ இடத்திலேயே இறந்து போனார். நவீனாவின் அலறல் சத்தத்தை கேட்டு அறையிலிருந்து வெளி வந்த வக்கீல்கள், ராஜப்பாவை பிடிக்க முயற்சித்தனர். அவர்களை தட்டி விட்டு, ராஜப்பா அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்று, தன் கழுத்தில் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். கதவை உடைத்து அவரை மீட்டு பெங்களூரு மல்லையா மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நவீனாவுக்கு வேறொருவருடன் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதையறிந்த ராஜப்பா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய போது, ஆத்திரமடைந்து நவீனாவை ராஜப்பா கொலை செய்துள்ளார்.
நூற்றுக்கணக்கான வக்கீல்கள், கட்சிக்காரர்கள் மற்றும் பொது மக்கள் வரும் ஐகோர்ட்டில், பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம், கர்நாடகா சரித்திரத்திலேயே முதல் முறையாகும். இந்த கொலையால் மொத்த ஐகோர்ட் வளாகமும் ஸ்தம்பித்தது. கொலை நடந்த இடத்தில் ரத்த வெள்ளம் தேங்கி காணப்பட்டது. சுவர்களில் ஆங்காங்கே ரத்தம் சிதறி காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட நவீனா, ஐகோர்ட் மூத்த வக்கீல் பிரகாஷ் ஷெட்டியிடம் ஜூனியராக பணியாற்றி வந்தார். ராஜப்பா, வில்சன் கார்டனை சேர்ந்தவர். நவீனா, கோலார் மாவட்டம் சிந்தாமணி ஜம்பாபுராவை சேர்ந்தவர். குற்றங்கள், கொலை போன்ற வழக்குகளில் ஆஜராகி, வாதம் நடந்து வரும் கோர்ட்டிலேயே, இத்தகைய கொடூர கொலை நடந்திருப்பது மிகவும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொலை நடந்த இடத்தை அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE