இது உங்கள் இடம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (24)
Share
இது உங்கள் இடம்

பெட்ரோல் விலை: நிஜம் என்ன? விஸ்வநாத ஹாலாஸ்யம், மதுரையிலிருந்து எழுதுகிறார்: இந்த ஆண்டு மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை கூட்டப்பட்டிருக்கிறது. இது சிறிதும் நியாயமில்லை. அதுவும், 191 லிட்டர் கொண்ட ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 78 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில், லிட்டருக்கு 51 ரூபாய் என்று விற்ற போது, அரசு அதை 55 ரூபாய்க்கு உயர்த்தியது. அரசுக்கு வேறு வழி தெரியவில்லை என்று காரணம் கூறப்பட்டது. பிறகு படிப்படியாக குறைந்த போது, ஒட்டக பாரத்தைக் குறைப்பது போல், லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டும் குறைத்தனர். இப்போது, லிட்டருக்கு 56 ரூபாய் என்று, பெட்ரோல் விலையைக் கூட்டி விட்டனர். ஒரு பீப்பாயில், விமானங்களுக்கு பயன்படும், "ஏ' ரக பெட்ரோல் 40 லிட்டர், கார்களுக்கு பயன்படும், "பி' ரக பெட்ரோல் 50 லிட்டர் மற்றும் 41 லிட்டர் டீசல் கிடைக்கும். மேலும், 18 லிட்டர் மண்ணெண்ணெய், 10 லிட்டர் உயர்தர மசகு எண்ணெய் கிடைக்கும். காஸ், தார் கோக், சுத்தப்படுத்தும் எண்ணெய், பிளாஸ்டிக் மூலப்பொருள் இன்னும் பல பொருட்கள் கிடைக்கின்றன. "ஏ' ரக மற்றும் "பி' ரக, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உயர்தர எண்ணெய், இவை மொத்தம் 150 லிட்டர். இதர பொருட்களின் விலை, கச்சா எண்ணெயை சுத்திகரிக்க ஆகும் செலவுக்கு போதுமானது. இன்றைய சந்தை விலை, ஒரு பீப்பாய் 80 டாலர் என்று வைத்துக் கொண்டால், அது 3,680 ரூபாய்க்கு சமம். மொத்தம் 150 லிட்டரில், சுத்திகரிக்கப்பட்ட பின் மாற்றப்படும் போது, அதில் 8 லிட்டர் வீணாக அல்லது ஆவியாக மாறினாலும், 142 லிட்டர் கிடைக்கும். ஒரு லிட்டரின் விலை, 26 ரூபாயாக மதிப்பிடலாம். இதில் 40 லிட்டர், "ஏ' ரக பெட்ரோல். இதன் விலை, சாதா பெட்ரோலை விட ஒன்றரை மடங்கு அதிகம். 40 லிட்டர், "ஏ' ரக பெட்ரோலுக்கு 1,550 ரூபாய் கிடைக்கும். இதன்படி பார்த்தால், சுத்திகரிப்பு செய்தபின், அடக்க விலை 20 ரூபாயை தாண்டாது. இந்த விலை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உயர்தர எண்ணெய் எல்லாவற்றிற்கும் பொதுவானது. அரசு வரி 50 சதவீதம் என்றாலும், விலை லிட்டருக்கு 36 ரூபாயை தாண்டாது. இப்படி புள்ளி விவரம் இருக்கையில், இந்த பெட்ரோல், டீசல் விலை மிக, மிக அசாத்தியம். மேலும், தற்சமயம் எண்ணெய்க் கம்பெனிகளிடமே விட்டால், தங்கம் விலை போல், அன்றாட விலையைப் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கம்பெனிகள் பொறுப்பில் விலைக் கட்டுப்பாட்டை வைத்தால், பிறகு பெட்ரோலிய அமைச்சகம் என்பதே தேவையில்லை.


அது ஒரு பொற்காலம்! ஆர்.நடராஜன், கல்லூரி முதல்வர் (ஓய்வு), திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில், முதல்வர் கருணாநிதி அறிக்கை தருவதும், உடனே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுப்பு அறிக்கை விடுவதும், நாள் தோறும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன், காமராஜர் முதல்வராக இருந்த போது நடந்த சம்பவத்தை, இப்போது நினைவு கூறுவது அவசியமே! காமராஜர் அமைச்சரவையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த ராமையா, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவரது ஊரிலிருந்து சிலர், காமராஜரைச் சந்தித்து, "மந்திரி ராமையா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சொந்த ஊரில் இடம் வாங்கியுள்ளார் என்ற பேச்சு உள்ளது' என்று கூறினர். உடனே காமராஜர் அவர்களிடம், "இப்போதே ராமையாவை வரவழைக்கிறேன்; நீங்கள் அவரிடம் எல்லாவற்றையும் கேளுங்கள்; நானும் விசாரிக்கிறேன். ஏதேனும் தவறு நடந்திருந்தால், ராமையா ராஜினாமா செய்வது மட்டுமல்ல, தார்மீகப் பொறுப்பேற்று, என் அமைச்சரவை உடன் பதவி விலகும்' என்று பதிலளித்தார். உடனே திருமயத்தைச் சேர்ந்தவர்கள், "உங்களோடு இருப்பவர்கள் எந்தத் தவறும் செய்ய முடியாது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். தேவையற்ற குற்றச்சாட்டைக் கூறியதற்கு நாங்கள் வருந்துகிறோம்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டனர். அந்தப் பொற்கால நிகழ்வுகளை இன்று நினைவுபடுத்தினால், ஊழல் குறையும் அல்லவா!


சாவு மணி அடியுங்கள்! நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசு திணறுகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தீர்மானிக்கப்பட்டால், வேறுவினையே வேண்டாம்; இந்தியா போர்க்களம் ஆகிவிடும். ஜாதிவெறி பிடித்த தலைவர்களை, இப்போதே பிடிக்க முடியவில்லை. வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் ஜாதி மாநாடுகளால், சாலைகளில் செல்ல முடியவில்லை. தேசிய மக்கள்தொகைக் கணக்கில், ஜாதி அடிப்படையில் கணக்கீடு அமைந்துவிட்டால், உயர்பதவி வெறி, தானாகவே வந்துவிடும். அறியாமை நிறைந்த மக்கள் சமுதாயம், இன்றுவரை நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், செம்மறி ஆட்டுக் கூட்டம் போல், சாய்கிற பக்கமெல்லாம் சாய்கிறது. ஜாதிக் கணக்கு தெரிந்து, ஜாதித் தலைவர்களால் தூண்டிவிடப்பட்டால், அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் குதிப்பர். இப்போதே, தேசிய ஒற்றுமை தேய் பிறை ஆகிறது. அண்டை மாநிலங்களும் இந்தியாவில் தானே உள்ளன என்ற எண்ணம் கடுகளவும் இல்லை. மத்திய அரசு, ஜாதிக் கணக்கெடுப்புக்கு சாவு மணி அடித்து, நாட்டைக் காக்க வேண்டும்.


தலை நிமிர்ந்து நிற்பது எப்படி? சே.கா.காஜா முகைதீன், நெல்லையிலிருந்து எழுதுகிறார்: நான் பஸ்சில் பயணம் செய்யும் நேரம், நூறு தமிழரிடம், இன்றைய தமிழ் தேதி என்ன, தமிழ் மாதம் என்ன என்று கேட்டேன். அதில், 99 பேர், ஜூன் 25 என்றனர். எல்லாரும் பேன்ட் அணிந்தவர்கள். வேட்டி உடுத்தியிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டபோது, ஆனி மாதம் 11ம் தேதி என்றார். தமிழ் மாதத்தையும், தேதியையும், திருமண அழைப்பிதழ்களிலும், கருமாதி பத்திரிகைகளிலும் மறக்காமல் போடுவர். ஒரே ஒரு மாதத்தை மட்டும் மறக்க மாட்டார்கள்... அது, தள்ளுபடி மாதமான ஆடி தான். இதை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு, வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும், தமிழ் மாத முதல் தேதியில் சம்பளம் கொடுக்க வேண்டும். அதே போல, தமிழக அரசு ஊழியர்கள் வேட்டி, சட்டையுடனும், பெண்கள், சேலை அணிந்தும் வர வேண்டும். முடியும் என முயற்சித்தால் இது நடக்கும். அரசியல்வாதிகள் பொதுக் கூட்டம் போடுவதாக இருந்தாலும், தமிழ் மாதம், தேதியை மட்டும் குறிப்பிட வேண்டும். கோவை செம்மொழி மாநாட்டில், அரசு ஊழியர்கள் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்று சொன்னது, தாமதமாக எடுத்த முடிவு எனினும், பாராட்டுக்குரிய விஷயம்!


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X