லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்-2012 போட்டிகளை படமெடுக்க தமிழகத்தில் இருந்து செல்லும் ஒரே புகைப்படக்கலைஞர் எஸ்.சுகுமார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படங்கள் எடுத்துவரும் எஸ்.சுகுமார் திருமணம், தொழிற்சாலைகள், பத்திரிகை துறை என்று புகைப்படம் தொடர்பான பல துறைகளில் பயணம் செய்தாலும் அவருக்கு விளையாட்டு துறை சம்பந்தமாக படங்கள் எடுப்பது என்றால் மிகவும் விருப்பம்.
இதன் காரணமாக தனது சொந்த பணத்தை செலவழித்து மலேசியா, இலங்கை, டோஹா, சீனா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை படமெடுத்துள்ளார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு கடந்த முறை சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் ஆசியா விளையாட்டுப் போட்டிகளை படமெடுக்க போய்வந்தார்.
இவரது கேமிராவில் சிக்காத விளையாட்டு வீரர்களே அநேகமாக இல்லை எனலாம். தனது படைப்புகள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும், விளையாட்டு துறையில் இளவயதினருக்கு ஊக்கம் ஏற்படவேண்டும் என்பதற்காக இரண்டு முறை தனது புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தியுள்ளார். இது போக ஆர்வமுள்ள ஆனால் பணம் செலவழித்து படிக்கமுடியாத இளைஞர்களுக்கு இலவசமாக புகைப்பட பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
ஒலிம்பிக் மற்றும் ஆசியா விளையாட்டுப் போட்டிகளின் போது நடைபெறும் துவக்கவிழா மற்றும் நிறைவு விழாவினைக் காண கண் கோடி வேண்டும். பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் வண்ணமயமான அந்த தருணங்களை படமெடுக்கும் வாய்ப்பு கிடைக்காத, என பல போட்டோகிராபர்கள் தவமாய் காத்துகிடக்கும் நிலையில், வருகின்ற 2012 ல் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை படமெடுக்க தேர்வாகியுள்ளது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறும் இவர், இதற்கு தேவைப்படும் பணம் சுமார் இரண்டு லட்சத்தை சேசர்க்கும் பணியில் இறங்கிவிட்டார்.
வழக்கம் போல நல்ல பல படங்கள் எடுத்து வர எஸ்.சுகுமாரை வாழ்த்துவோம்.
அவர் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் ஆசியா விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவின் போது எடுத்த படங்களை பார்க்க அவரது படத்திற்கு கீழே உள்ள சிவப்பு பட்டைக்குள் அடங்கியுள்ள போட்டோ கேலரியை "கிளிக்' செய்து பார்க்கலாம்.
எஸ்.சுகுமார் பற்றி கூடுதல் விவரத்தை அறிந்து கொள்ள www.shutterbugsukumar.com என்ற இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE