ராமநாதபுரம் : ரூபாய் நோட்டில் கோலம் போட்டு விளையாடும் அநாகரீகம் அதிகரித்து வருவதால், அவற்றின் மதிப்பை வருங்கால சந்ததிகள் உணர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உயிர் வாழ அவசியம் காற்று என்பதை கடந்து, இன்று பணம் என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு பணத்துக்கு மவுசு கூடிவிட்டது. குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்ப்பதும், கொத்தடிமைகளால் செங்கல் சூளைகளில் முடங்கி கிடப்பதும் பணத்துக்காக தான். உழைப்பவரின் ரத்தம் வியர்வையாக வரும் போது, அந்த வியர்வையின் துளிகள் பணமாக மாறுகிறது என்பது தான் உண்மை. இதை நன்கு அறிந்ததால் தான் வெளிநாடுகளில் பணத்தை கடவுள் போல பாவிக்கின்றனர். இதனால் தான் அங்கு வளர்ச்சியும் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் நமது நாட்டில் காகிதத்துக்கு தரும் மதிப்பை கூட பணத்திற்கு தருவதில்லை.
கெட்ட வார்த்தைகள், சினிமா நடிகர்களின் புகழ்ச்சி வாசகங்கள், அரசியல் தலைவர்களின் உருவங்கள், மதப்பிரசாரங்கள் போன்றவற்றை ரூபாய் நோட்டுகளில் வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள இந்த பழக்கம், இந்தியாவில் மட்டும் அனுமதிப்பது வேதனைக்குறியதாகும். உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட இந்தியாவில், கைமாறும் பணமானது, வியர்வையில் பட்டு, கசங்கிய நிலையில் தான் புழக்கத்துக்கு வரும் ,இதில் போதாக்குறைக்கு பேனா கிறுக்கல் இணைவதால், அதை பரிமாற்றம் செய்வதில் பல்வேறு சிக்கல் இருந்து வருகிறது. முன்பெல்லாம் காதலுக்கு பறவைகளை தூது விட்ட நிலை மாறி, ரூபாய் நோட்டுகள் காதல் கவிதைகளை சுமந்து செல்கின்றன. நம் வீட்டின் சுவருக்கு ஒப்பான ரூபாய் நோட்டை, நாமே அசிங்கப்படுத்தலாமா?
தேசிய சின்னம், மகாத்மாவின் உருவம் என பாதுகாக்கபட வேண்டிய காரணிகள் நிறைய இருந்தும், அதை நாமே இழிவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இது போன்ற ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்தால் மட்டுமே யாரும் இது போன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்னோட்டமாக அனைவரும், "இது போன்ற செயலை இனி செய்யமாட்டோம்,' என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு ரூபாய் நோட்டுகளின் அவசியமும், அருமையும் தெரியும். .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE