புதுடில்லி : போபால் விஷவாயு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு தனக்கில்லை என்று கைவிரித்து விட்ட "டோவ்' நிறுவனம், அமெரிக்காவில் அதே யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கச் சம்மதித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் அமைத்திருந்த தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.இந்நிலையில், 2001ல் யூனியன் கம்பெனியை அமெரிக்காவைச் சேர்ந்த "டோவ்' நிறுவனம் வாங்கியது. போபால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, "டோவ்' தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை, அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
இச்சூழலில், 1940-50ம் ஆண்டுகளில் அமெரிக்காவில், யூனியன் கார்பைடு நிறுவனம் தயாரித்த கல்நார் எனப்படும் "ஆஸ்பெஸ்டாஸ்' உற்பத்தியால் அங்குள்ள மக்களுக்கு, நுரையீரல், தொண்டை, குரல்வளை புற்றுநோய்கள், நுரையீரல் சேதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாயின.கடந்த 1991ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி, "ஆஸ்பெஸ்டாஸ்' பாதிப்பால், 2015 ல் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் பேர் உடல்நலம் பாதிக்கப்படுவர் என்று கணக்கிட்டுள்ளது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 75 ஆயிரத்து 30 வழக்குகள் பதிவாயின. இவற்றில், யூனியன் கார்பைடின் துணை நிறுவனமான, "ஆம்செம் பிராடக்ட்ஸ்' நிறுவனத்துக்கு எதிரான, 24 ஆயிரத்து 146 வழக்குகளும் உண்டு. இவை போக, தனிநபர்கள் சார்பில் பதிவான 50 ஆயிரம் வழக்குகளில், 2009ல் ஒன்பதாயிரம் வழக்குகளில் "டோவ்' நிறுவனம் இழப்பீடு வழங்கி முடித்துள்ளது.இழப்பீட்டுக்காக நாலாயிரம் கோடி ரூபாயை "டோவ்' நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதில் 23 சதவீத நிதி ஏற்கனவே நிலுவையில் இருக்கும் இழப்பீட்டு கோரிக்கைகளுக்காகவும், மீதி 77 சதவீத நிதி, எதிர்காலப் பாதுகாப்புக்கான வைப்புநிதியாகவும் பயன்படுத்தப்படும்.இதுவரை 7,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள "டோவ்,' வழக்குகளுக்காக மட்டும் 3,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
தனது துணை நிறுவனமான யூனியன் மற்றும் ஆம்செம் நிறுவனங்களுக்கும் சேர்த்து, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிர்காலப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கவும் முன்வந்துள்ள, "டோவ்' நிறுவனம், இந்தியாவில் மட்டும் தன் துணை நிறுவனமான யூனியன் கார்பைடு கம்பெனிக்கான இழப்பீடு வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயல்கிறது.
இதுகுறித்து போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு வழக்குத் தொடுத்துள்ள என்.டி.ஜெய்பிரகாஷ் என்பவர் கூறுகையில்,"1992ல் யூனியன் கார்பைடு நிறுவனம் தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது மத்திய அரசால் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. எல்லா குற்றவியல் வழக்குகளையும் போல இவ்வழக்கிலும் யூனியன் கம்பெனியை வாங்கிய "டோவ்' நிறுவனத்துக்குத்தான் யூனியன் கம்பெனியின் இழப்பீடு வழங்குவது உட்பட அத்தனைப் பொறுப்புகளும் சேரும்' என்று தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE