சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, கவர்னர் மாளிகையில், 20 நிமிடங்கள் சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பான விரிவான மனு ஒன்றை அளித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காலை, 9 மணிக்கு, கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தையும், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும், அதற்கு முரணாக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கையையும், அணையின் நீர் மட்டத்தை, 120 அடியாக குறைக்க, புதிய அணை கட்டுவதற்கு அந்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் விவாதித்தார்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்னை காரணமாக, இரண்டு மாநிலத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் உறவும், நட்பும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்றும், இரு மாநிலங்களிலும் சுமுகமான வாழ்க்கை நிலை திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். பிரதமருடன் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அன்பழகன், மத்திய அமைச்சர் அழகிரி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமரிடம் அளித்த மனுவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அணையின் நீர் மட்டத்தைக் குறைக்கும் கேரள அரசின் முயற்சிகள், தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கும் செயல். இப்பிரச்னை தொடர்பாக, இரு மாநில எல்லையில் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு, தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை நிர்வகிக்க தற்போதுள்ள அமைப்புகள் நடைமுறையில் திறமையற்றதாக இருப்பதாக எச்சரித்திருந்தேன். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல், அணை நீர் மட்டத்தை, 120 அடியாக குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கேரள அரசின் இந்த போக்கால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் நீர் வசதியின்றி, பாலைவனமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ் படை நிறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து நடக்க, கேரள அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., குழு உறுப்பினர்களால் சர்ச்சை : உடல்நிலை சரியில்லாததால், பிரதமரை சந்தித்த தி.மு.க., குழுவில், கட்சிப் பொருளாளர் ஸ்டாலின் இடம்பெற முடியவில்லை. கட்சித் தலைவர் கருணாநிதி தவிர, பொதுச் செயலர் அன்பழகன், மத்திய அமைச்சர் அழகிரி, எம்.பி.,க்கள் பாலு, கனிமொழி, இளங்கோவன் இருந்தனர்.
முதலில், இக்குழுவில், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனும் இடம் பெற்றிருந்தார். பிரதமரைச் சந்திக்க கனிமொழியும் கடைசி நேரத்தில் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அவருக்கு பதிலாக கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட கனிமொழி, பிரதமரை சந்திப்பது, தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் தயங்கியதாகவும், தலைவரின் விருப்பத்தால், அதை தவிர்க்க முடியாமல் போனதாகவும், கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றி நன்கு தெரிந்த சட்டவல்லுனர்கள் அல்லது முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்லாமல், அணையின் ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த கட்சிக்காரர்களை அழைத்துச் சென்றதால், பிரச்னை பற்றி பிரதமரிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்த முடியாமல் போனதாகவும், தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். எல்லையில் நிலவும் பதட்டம் பற்றி விளக்க, தேனி மாவட்டச் செயலர் மூக்கையாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, அதை அவர் திறம்படக் கையாளவில்லை என குமுறுகின்றனர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE