சென்னை: ""முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.
நேற்று கைதாகி விடுதலையான பின், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை, தமிழக மீனவர், கூடங்குளம் பிரச்னைகளில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் வருகையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. போராடும் மக்களை சந்தித்து பேசாமல், "2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாக்களில் பங்கேற்க பிரதமர் வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே, திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டு போட்ட மக்களுக்கு அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என பிரதமரிடம் கருணாநிதி மனு கொடுத்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அவர் இப்பிரச்னையில் என்ன செய்தார்? அவரைப் போலவே ஜெயலலிதாவும் பிரதமரிடம் மனு கொடுத்துள்ளார்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுகின்றனர். ஊழல் என்றால் இருவரும் ஒன்றாகி விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக நான்கு முறை போராட்டம் நடத்திவிட்டோம். இப்பிரச்னைக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்.
நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என என்னிடம் கேட்கின்றனர். இதற்கு நடிகர் சங்கத் தலைவர் மற்றும் செயலர் தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE