மும்பை: சீனாவில், கடத்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த, 22 வைர வியாபாரிகளில், 12 பேர் விடுவிக்கப்பட்டு, நேற்று நாடு திரும்பினர்.சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஷென்ஜென் நகரில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை, ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடத்தியதாக, 22 இந்திய வைர வியாபாரிகள், கடந்தாண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பலர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை விடுவிக்க, மத்திய வெளியுறவு அமைச்சகம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் முயன்றனர். சீனாவுக்கு, கடந்தாண்டு சென்றிருந்த மோடி, இதுகுறித்து, சீன அரசிடம் கோரிக்கை விடுத்தார்.இவர்களில், 12 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, ஷென்ஜென் நகர கோர்ட், கடந்தாண்டு டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பளித்தது.
அதன்படி, 22 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை நாடு திரும்பினர். ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு, அவர் சீனாவிலேயே தங்கி, வழக்கு விசாரணையில் பங்கேற்பார். மீதமுள்ள ஒன்பது பேர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மூன்றாண்டு முதல் ஆறாண்டுகள் வரை, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய வியாபாரிகளின் குடும்பத்தினர், மத்திய அரசுக்கும், சீன அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.