சென்னை ; நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் உடைந்து விழுந்ததால், நான்கு பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம் நிலையத்திற்கு ரயில்களில் வரும் பயணிகள், ரயில் பாதையை கடந்த செல்ல, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நடை மேம்பாலங்கள் உள்ளன. கிழக்கு பக்கம் உள்ள நடை மேம்பாலத்தை நேற்று காலை 10 மணிக்கு, ரயில் பயணிகள் கடந்து செல்ல முயன்ற போது, பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள சிமென்ட் தளம் திடீரென்று உடைந்ததால், அப்பகுதியைக் கடந்து செல்ல முயன்ற ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மோகன், 50, யுவராஜ், 49, முரளிதரராவ், 48, சென்னையைச் சேர்ந்த நசீர், 50, ஆகியோர் பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் காயமடைந்தனர்.
எழும்பூர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோகன், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையிலும், முரளிதரராவ் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். யுவராஜ், நசீர் இருவரும் அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நடைமேம்பாலம் ரயில்வே மூலம் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால், சமீபத்தில் பெய்த மழையினால், சிமென்ட் தளம் வலுவிழந்து, உடைந்து விழுந்ததாக ரயில்வே பணியாளர் ஒருவர் கூறினார். எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE