மாமல்லபுரம் : ஆனூர் கிராமத்தில், நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, நேற்று பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்திலிருந்து, செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில், வல்லிபுரம், ஆனூர், பொன்விளைந்தகளத்தூர், ஒத்திவாக்கம், புதுப்பாக்கம் உட்பட, பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள், பல்வேறு தேவைகளுக்காக, தினமும் செங்கல்பட்டு செல்கின்றனர். செங்கல்பட்டிலிருந்து பூதூர், தச்சூர் கிராமங்களுக்கு, இவ்வழியில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இச்சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீரழிந்தது.
கடந்த ஆண்டு பெயரளவிற்கு சாலை சீரமைக்கப்பட்ட, அதே வேகத்தில் சாலை சீரழிந்தது. குண்டும் குழியுமாக உள்ள சாலையில், குலுங்கியபடி செல்லும் பஸ்கள், அவ்வப்போது சாலையோர பள்ளத்தில் கவிழ்கின்றன. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நேற்று காலை 8 மணிக்கு, அப்பகுதி மக்கள் ஆனூர் கிராமத்தில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் மல்லிகா, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர், பொது மக்களை சமாதானப்படுத்தினர்.
உடனே சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். அதையேற்று, காலை 10.15 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE