மற்றவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை; எங்களாலும் முடியும்

Updated : ஜூலை 13, 2010 | Added : ஜூலை 12, 2010 | கருத்துகள் (10) | |
Advertisement
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் முடங்கிப் போயிருந்தது அந்தக்காலம். தற்போது, அவர்களும் மற்றவர்களைப் போல தன்னம்பிக்கையுடன், தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு, ஏதேனும் ஒரு துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இந்த வகையில்  கல்வித்துறையில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத் திறனாளிகள் புறப்பட்டுள்ளனர். அதன் பலன் தமிழகத்தில் உள்ள

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் முடங்கிப் போயிருந்தது அந்தக்காலம். தற்போது, அவர்களும் மற்றவர்களைப் போல தன்னம்பிக்கையுடன், தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு, ஏதேனும் ஒரு துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இந்த வகையில்  கல்வித்துறையில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத் திறனாளிகள் புறப்பட்டுள்ளனர். அதன் பலன் தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்தாண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சேர்ந்து தங்கள் திறமையை வெளி உலகிற்கு கொண்டு வரவுள்ளனர்.


தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் சேர்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவர்கள் சாதாரண மனிதர்களை விட 40 சதவீத  குறைபாடு உடையவர்களாக இருக்க வேண்டும். குணப்படுத்த முடியாத நோய்களை கொண்டவர்களும் மாற்றுத் திறனாளிகளாக கருதப்படுவர். உடல் ஊனமுற்றவர்கள், காது கேட்காதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் முறையான மருத்துவ சான்றிதழ்கள் பெற்றிருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான இன்ஜினியரிங் பிரிவு சிறப்பு சேர்க்கையில் அனுமதிக்கப்படுகின்றனர். அண்ணா பல்கலைக் கழகம் நியமித்த விதிமுறைகளை விட முழு அளவில் தகுதியற்ற மாற்றுத் திறனாளிகள் மட்டும் சேர்க்கப்படுவதில்லை.கடந்த ஆண்டுவரை மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மூன்று சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்தாண்டு முதல் பார்வையற்றவர், காதுகேளாதோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் இந்தாண்டு 410 மாணவர் இன்ஜினியரிங்கில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் மனுக்கள் மட்டும் முறையான மருத்துவ சான்றிதழ் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களுக்காக  நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 401 மாணவர்களில் 377 பேர் அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 4ம் தேதி கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இதில், பிளஸ் 2 வில் தொழிற்கல்வி படித்த 17 பேரும், பொது பிரிவில் படித்த 327 பேரும் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்தாண்டு பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 68 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 58 பேர், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 32, சிவில் பிரிவில் 35, ஐ.டி.,பிரிவில் 21, மெக்கானிக்கல் பிரிவில் 41 பேர், சிவில் மற்றும் மெக்கானிகல் (தமிழில்) பிரிவில் 9 என பல பிரிவுகளில் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இதில், பலர் அண்ணா பல்கலைக் கழகத்திலும் மற்றவர்கள் அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.


இது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மன்னர்ஜவகர் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அதிக திறமை கொண்டவர்களாக கடவுள் படைத்துள்ளார். அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்துபவர்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கின்றனர். ஐ.டி., நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்த முன்பு யோசித்தனர். தற்போது, அவர்களின் திறமையை புரிந்து கொண்டு வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்களின் கடமை. அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கின்றனர். குறைபாடு உள்ளதாக சுட்டிக் காட்டினால் மட்டும் சங்கடப்படுகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தை பொறுத்தவரை இங்கு தங்கி படிக்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் வாகன வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. பல்கலை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் வகுப்பறை மற்றும் கேன்டீன் செல்வதற்கு வசதியாக நிரந்தரமாக வாகனங்கள் வாங்கும் திட்டம் உள்ளது. இவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் வகுப்பறைக்கு சென்று வருவதற்கு சாய்தள தட வசதி உள்ளது. விடுதிகளில் அவர்களுக்கு கீழ் தளத்தில் அறை ஒதுக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியர்  தங்கள் வீடுகளில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்தாண்டு மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர் பலர் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரிகளையும் தேர்வு செய்துள்ளனர்.சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியர் அதிகளவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளது பெருமையளிக்கிறது. வரும் ஆண்டுகளில் அதிகளவு மாணவர்களின் சேர்க்கை அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு துணை வேந்தர் மன்னர்ஜவகர் கூறினார்.


மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்கலைக் கழகம் மற்றும் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையம் (சி.யு.ஐ.சி.,) சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


இது குறித்த அதன் இயக்குனர் செல்வம் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாறுபட்ட சிந்தனை, மன அழுத்தத்தை வெளியே எடுக்கும் பயற்சி, கால மேலாண்மை, தலைமைப் பண்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் அளித்து வருகிறோம். இந்த பயிற்சிகள் இறுதி ஆண்டு படிப்பவர்களுக்கு மட்டும் அளித்து வந்தோம். இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டில் இருந்தே பயிற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயற்சி கையேடு இந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.மாற்றுத் திறன் கொண்டவர்களின் வேலை வாய்ப்பு பொறுத்தவரை  தனி தேர்வு நடத்தப்படுகிறது. அவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். முன்பு மாற்றுத் திறனாளிகளை பணிக்கு அமர்த்த சில நிறுவனங்கள் தயங்கின. ஆனால், அவர்களின் வேலை திறமையை பார்த்து தாங்களாகவே பணியமர்த்த ஆர்வம் காட்டுகின்றன.  தற்போது, சில நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்காக சில  சதவீத இட ஒதுக்கீடும் அளித்து வருகின்றன.இவ்வாறு சி.யு.ஐ.சி., யின் இயக்குனர் செல்வம் தெரிவித்தார்.


அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் படித்து வரும் மாணவியரின் அனுபவங்கள்:


திருப்பத்தூர் ரேவதி: திருப்பத்தூர் அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவள். எனது தந்தை விவசாயம் பார்த்து வருகிறார். நான் போலியோவால் பாதிக்கப்பட்டவள். சிறு வயதில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பேன். அப்போதெல்லாம் எனது பெற்றோர் எனக்கு தன்னம்பிக்கை அளித்தனர். அதன் பயனாக கல்வியில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தேன். பிளஸ் 2 முடித்தவுடன், எனது உடல் இயலாமையைக் கண்டு பலர் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், பல எதிர்ப்புகளை சமாளித்து நான் இளநிலை கல்வி முடித்தேன். தற்போது, எம்.பி.ஏ., படிக்கிறேன். இங்கு, என்னுடன் படிக்கும் சக மாணவியர் அனைவரும் எனக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கின்றனர். இதனால், எனக்கு புது தன்னம்பிக்கை பிறந்துள்ளது.  நான் நிச்சயம் சாதிப்பேன். என்னைப் போல மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.


விழுப்புரம் பாரதி: எனது பெற்றோர் விவசாயம் பார்த்து வருகின்றனர். போலியோவால் பாதிக்கப்பட்ட எனக்கு கல்வி ஒன்றுதான் முன்னேற வழி என சிறுவயதிலேயே மனதில் பதிந்தது. அதன் பயனாக கோவையில் பி.இ., முடித்தேன். தற்போது, அண்ணா பல்கலையில் எம்.இ., படித்து வருகிறேன். கால்கள் செயல் இழந்துவிட்டதே என்று நான் மூலையில் முடங்கிவிடவில்லை. கடவுள் ஒரு வழியை மூடினால் மற்றொரு வழியை திறப்பார் என்பார்கள் அது எனது வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. மாற்றுத் திறன் கொண்ட மற்றவர்களுக்கு நான் ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும் என முடிவு செய்தேன். அந்த லட்சியத்தை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறேன்.


இன்ஜினியரிங் படிப்பில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்கள் கூறியதாவது:


திருவொற்றியூர் பாலகுமார்: திருவொற்றியூர், எஸ்.பி.,கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மனைவி சித்திரகலா. வாடகை வீட்டில் வசித்து, மளிகை கடை நடத்தி வரும்  இவர்களின் மகன் பாலகுமார்(17). இவர் பிறந்த போதே போலியோவால் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்க இதுவரை பாலகுமாருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இருப்பினும் குறைபாடு நீங்கவில்லை. படிப்பில் ஆர்வம் காட்டிய பாலகுமார் பள்ளித் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களுக்கான "ரேங்க்' பட்டியலில் இடம் பிடித்து வந்தார். இவர், பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்து 143 மதிப்பெண்கள் பெற்றார். தற்போது, அண்ணா பல்கலை கழகத்தில் "கம்ப்யூட்டர் சயின்ஸ்' பிரிவில் சேர்ந்துள்ளார்.


தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து பாலகுமார் கூறுகையில்,"ஊனம் தடையல்ல என்பதை செய்திகள் மற்றும் விழிப்புணர்வு சம்பவங்கள் மூலம் அறிந்துள்ளேன். அதன்படி நானும் எனது ஊனத்தை வெல்வதற்கு கல்வியை துணையாக கொண்டேன். எதிர்காலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்ற வேண்டும். எனது குடும்பத்தினருக்கு குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்துள்ள என் பெற்றோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்பது லட்சியம். படிப்பிற்காக தினமும் பஸ் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். இரு சக்கர வாகன வசதி கிடைத்தால் போக்குவரத்து நெரிசல், காலதாமதம் போன்ற பாதிப்புகளில் சிக்காமல் முழுமையான கல்வி பெறும் வாய்ப்பு இருக்கும் ஆனால், அதற்கான வசதியில்லை,' என்றார்.


ஆதம்பாக்கம் ஹரிஹரன்: ஆதம்பாக்கம் சாந்தி காலனியை சேர்ந்தவர் ரவிசேகர். தனியார் வங்கி ஊழியர். இவரின் மனைவி சித்ரா அஞ்சலக ஊழியர். இவர்களின் இரண்டாவது மகன் ஹரிஹரன். குறை மாதத்தில் (ஏழு மாதத்தில்) இவர் பிறந்தார். இதனால், கை, கால்கள் பாதிக்கப்பட்டன. இன்றைக்கும் இவரால் ஐந்து நிமிடம் தொடர்ந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. பேச்சு திறனும் சற்று குறைவு. இருப்பினும் தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி காரணமாக அண்ணா பல்லைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்துள்ளார்.


இது குறித்து  ஹரிஹரனின் பெற்றோர் கூறுகையில்,"குறைப் பிரசவத்தில் பிறந்த எனது மகனுக்கு கை, கால்கள் வலுவிழந்து காணப்பட்டன. சாதாரண பிள்ளைகளை விட சற்று வித்தியாசமாகத்தான் இருப்பான். ஆரம்பத்தில் அவனை எந்த பள்ளியிலும் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. சிறப்பு பள்ளியில் சேர்க்கும் படி ஆலோசனை வழங்கி ஏளனப்படுதினர். இந்நிலையில், எனது நண்பர் ஒருவர் உதவியுடன் தனியார் பள்ளி நிபந்தனையுடன் மகனை சேர்த்தோம். அவனின், அபார மூளைத் திறமை கண்டு அங்கேயே தொடர்ந்து படிக்க அனுமதி கொடுத்தனர். பத்தாம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், பிளஸ் 2 வில் ஆயிரத்து 134 மதிப்பெண்களும் பெற்றான். அதன் பலனாக அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.  அவனது உடல் நிலையை கருதி கல்லூரி விடுதியில் தங்க வைக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.


இன்ஜினியரிங் படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ள மாணவர் ஹரிஹரன் கூறுகையில்," எனக்கு கை, கால்கள் வலுவிழந்து உள்ளதால் விளையாட்டில் ஆர்வம் செலுத்த முடியவில்லை. எனவே, கல்வியில் ஆர்வம் செலுத்தினேன்.
அதன் பலன் தற்போது, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளேன்.  உடல் நிலை எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும், நான் இந்தளவிற்கு முன்னேறியதற்கு காரணம் எனது பெற்றோர் மற்றும் பள்ளி நண்பர்கள்தான். இவற்றை விட எனக்கு என்மீது ஒரு தன்னம்பிக்கை உண்டு. எதையும் பாசிடிவ் ஆக யோசிப்பவன். இந்த உத்வேகம் ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளிடமும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என்றார்.


ஈரோடு சங்கீதா: ஈரோடு அடுத்த பெரிய செம்மாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. இவரின் மனைவி லட்சுமி. இவர்களின் மகள் சங்கீதா. விவசாய குடும்பத்தை சேர்ந்த நல்லசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் தனது வலதுகாலை இழந்தார். கூலி வேலை பார்த்து லட்சுமி மகளை படிக்க வைக்கிறார். சங்கீதாவிற்கு சிறு வயதில் ஆணிக்கால் வந்தது. அதை சரியாக கவனிக்காததால் புறையேறி இடது கால் பழுதடைந்தது. தொடர்ந்து இவரால் அரை கிலோ மீட்டர் தூரம் கூட நடக்க முடியாது. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் படித்து பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்து 138 மதிப்பெண்கள் பெற்றார். அதன் பலனாக பெருந்துறையில் உள்ள கல்லூரியில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்துள்ளார்.


 இது குறித்து சங்கீதா கூறுகையில்," நான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எனது தந்தை விவசாயி. அவரும் விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்ததால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது.  எனது  தாய் கூலிவேலை பார்த்து என்னை படிக்க வைத்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு சாதனை செய்வதற்கு தடையில்லை என்பது எனது அனுபவத்தில் கிடைத்த பாடம்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தாலும் இன்ஜினியரிங் படிக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் பலன் கிடைத்தது. நான் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கே கடன் வாங்கிய சென்னை வந்தேன். எனது வீட்டிற்கும் கல்லூரிக்கும் 60 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. என்னால் தினமும் வீட்டிற்கு வந்து சென்று படிக்க முடியாது எனவே, விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கான பொருளாதாரம் எங்களிடம் இல்லை. இருப்பினும் நான் பி.இ., படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறேன்.தமிழக முதல்வர் மாற்றுத்  திறனாளிகளுக்காக எவ்வளவே சலுகைகள் அறிவித்துள்ளார். என்னைபோல உணவிற்கு கூட கஷ்டப்படும் குடும்பங்களில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்லூரி விடுதியில் இலவசமாக தங்கி படிக்க உதவி செய்தால் பல ஏழை மாற்றுத் திறனாளி குடும்பத்து மாணவர்கள் பயன்பெறுவார்கள்' என்றார்.


 சீனிவாசன்(செய்யாறு): மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் சீனிவாசன். இவரின் முதுகெலும்பு வளைந்துள்ளதால், நிமிர்ந்து நடக்க முடியாது.  தந்தை பார்த்தசாரதி, ரேஷன் கடையில் எடைபோடும் கூலித் தொழிலாளி. தாய் பூங்குழலியும், மகனின் படிப்பிற்காக கூலி வேலைக்கு செல்வது வழக்கம். செய்யாறில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த சீனிவாசன், பிளஸ் 2 தேர்வில், 1,129 மதிப்பெண்கள் பெற்றார். அதன் பலனாக அண்ணா பல்கலைக் கழகத்தில், மெக்கானிகல் பிரிவில் சேர்ந்துள்ளார்.


வறுமையில் தவித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவர் சீனிவாசன் கூறியதாவது:விடுமுறை நாட்களில் நான், மெடிக்கல் ஷாப்பிற்கு வேலைக்கு செல்வேன். அப்படி சிறுக சிறுக சேர்த்து தான், பிளஸ் 2 முடித்தேன். இன்ஜினியரிங் சேர்ந்து விட்டேனே தவிர, அதற்கான செலவை நினைத்து மிகவும் அச்சப்படுகிறேன்.
பகுதிநேர வேலை பார்த்தாவது, இன்ஜினியரிங் படிப்பை முடிப்பேன். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு எவ்வளவோ சலுகைகள் வழங்கி வருகிறது.எங்களைப் போல அடுத்த வேளை சாப்பாட்டிற்கே தவிக்கும் குடும்பத்தில் இருந்து படிக்க வரும் மாணவ, மாணவியருக்கு, விடுதியில் தங்கவும், உணவும் இலவசமாக கொடுத்தால் நாங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களாக திகழ்வோம்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.


ஏழுமலை (போளூர்): விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் சம்பத்-கலா  விவசாய கூலித் தொழிலாளிகள். அவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் ரூபாய். ஏழுமலைக்கு, மூன்று  சகோதரிகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது. ஆனால், அவர்கள் குடும்பத்தில், ஏழுமலையைத் தவிர படித்தவர்கள் யாரும் இல்லை. கஷ்டப்பட்டாலும் மகனை இன்ஜினியராக பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சம்பத்தும், கலாவும் மகனுக்காக உழைக்கின்றனர். அவர்களின் லட்சியத்தை அடைவதற்காகவே ஏழுமலையும், அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, எம்.ஐ.டி., யில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளார். 


வாழ்க்கையில் வெற்றி பெற்று, எதிர்காலத்தில் பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் ஏழுமலை கூறியதாவது:எனக்கு கழுத்து பகுதியில் பாதிப்பு உள்ளது. அதனால், சக மாணவர்களுடன் விளையாட முடியாமல் முடங்கி கிடப்பேன். நான் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே, இன்ஜினியரிங் படிக்கத் தூண்டியது. எனது சகோதரிகளின் திருமணங்களுக்காக வாங்கிய கடனே இன்னும் அடையவில்லை.
இருந்தாலும், இன்ஜினியரிங் படிக்க, என் பெற்றோர் அனுமதித்துள்ளனர். விடுமுறை நாட்களில் அப்பாவுடன் விவசாய வேலைக்கு சென்ற போது, வாங்கிய சம்பளத்தை ஆரம்ப கட்ட படிப்பு செலவிற்கு வைத்திருக்கிறேன். விடுதியில் தங்கி படிக்கப் போகிறேன். அதற்கான செலவை நான்  பகுதி நேர வேலை பார்த்து கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.இவ்வாறு ஏழுமலை கூறினார்.


சரண்யா (தாரமங்கலம்): சில்லறை நூல் வியாபாரி துளசிதாசின் மகள் சரண்யா. இவரின் குடும்ப ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய். சரண்யா இரண்டரை வயது சிறுமியாக இருந்த போது, விபத்து ஒன்றில் சிக்கி, இடது கால் இழந்தவர். அதன் பிறகு செயற்கை கால் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன், சிறிது தூரம் நடப்பார். நீண்ட நேரம் அவரால் நிற்க முடியாது. பிளஸ் 2 தேர்வில், 1,135 மதிப்பெண்கள் பெற்று, கோவையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.


இது  குறித்து சரண்யா கூறுகையில், "வெற்றிக்கு ஊனம் ஒரு தடையில்லை.  எனது குடும்ப சூழ்நிலையில் நான் இன்ஜினியரிங் படிப்பது அரிதான ஒன்று.  எதிர்காலத்தில் எனது பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக நான் கவனத்துடன் படிப்பேன். விடுதியில் தங்கி படிக்க தேவையான பணம் எங்களிடம் இல்லை. அதற்கு யாராவது உதவி செய்தால் நிச்சயம் அவர்களை வாழ்நாளில் மறக்க மாட்டேன்'
என்றார். தமிழகத்தில் உள்ள  மாற்றுத் திறனாளிகளுக்கு இவர்களின் தன்னம்பிக்கையும், முன்னேற்றமும் நிச்சயம் ஒரு ஊன்றுகோலாக அமையும்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் ஐயம்பிள்ளை - Salem,இந்தியா
13-ஜூலை-201018:14:50 IST Report Abuse
பொன் ஐயம்பிள்ளை எங்கும் தமிழன்.எதிலும் தமிழன். எந்த நிலையிலும் தனித்திறன் காண்பித்து தன்மானம் காப்பான் தமிழன். மாற்று திறனாளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
N. Raagavan - Singapore,இந்தியா
13-ஜூலை-201016:29:07 IST Report Abuse
N. Raagavan உங்களால் எதுவும் முடியும். உங்களை பார்த்து மற்றவர் தன்னம்பிக்கை கொள்ளட்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
ப.murali - Coimbatore,இந்தியா
13-ஜூலை-201014:59:13 IST Report Abuse
ப.murali we want opportuninty not took pity
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X