சென்னை: தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ. 6 ஆயிரத்து 654 கோடி நிதியில் செய்யப்படுவதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்துள்ளார். இதில் சென்னை குடிநீர் மேம்படுத்த ரூ. 41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு நகர்ப்புற கூட்டமைப்பு மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் என உருவாக்கி இதன் மூலம் மாநிலம் முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 6 ஆயிரத்து 654 கோடி ஒதுக்கப்படுகிறது. வரும் 2030 க்குள் மக்கள் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது அவசியமாகிறது. இந்த திட்டத்தின்படி சுகாதாரம் பேணுதல், குடிநீர், சாலைகள் செப்பனிடுதல், கழிவுநீர் அகற்றம், திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 5 ஆயிரத்து 890 கோடியும், பேரூராட்சி பகுதிகளுக்கு 763 .91 கோடியும் ஒதுக்கப்படும். சென்னையில் குடிநீர் மேம்பாட்டுக்கு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2 வது இணை குழாய் அமைக்க ரூ. 41 கோடியே 35 லட்சமும் ஒதுக்கப்படுகிறது.
முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் ரூ. 757 கோடியே 28 லட்சம் செலவில் பணிகள் துவக்கப்படும். மாநகர் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு ரூ. 506. 48 கோடியில், கழிவு நீர் வெளியேற்றம் ( 30 கோடியே 50 லட்சம்), குடிநீர் (58 கோடியே 80 லட்சம்), சாலைகள் சீரமைப்பு ( 145 கோடியே 11 லட்சம்) , மழைநீர் சேகரிப்பு ( 88 கோடியே 96 லட்சம்), சுற்றுசூழலை பாதுகாக்கும் திடக்கழிவு மேலாண்மை ( 124 கோடியே 54 லட்சம்), தெருவிளக்கு ( 58 கோடியே 57 லட்சம்) .கிராமப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 250 கோடியே 80 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisement