திருப்பூர்:"சில புத்தகங்கள், நடந்த வரலாற்றை பதிவு செய்யும்; சில புத்தகங்கள், வருங்கால வரலாற்றை உருவாக்கும்' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியம் பேசினார்.திருப்பூர் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய விருதுகள் - 2010 பரிசளிப்பு விழா, கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது; திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர் முருகநாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் மோகன், முத்தமிழ் சங்கத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஆடிட்டர் லோகநாதன் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:எல்லாருக்கும் இலக்கிய தாகம், இலக்கிய தாக்கம், இலக்கிய நோக்கம் உள்ளது. பார்க்கும் பார்வையை வித்தியாசப்படுத்தினால், அதில் இலக்கியம் பிறக்கும். சில புத்தகங்கள், நடந்த வரலாற்றை பதிவு செய்யும்; சில புத்தகங்கள், வருங்கால வரலாற்றை உருவாக்கும். நாடு, மதம், இனம், நிறம், மொழி கடந்து புத்தகங்கள் நிற்கின்றன; அது, புத்தகங்களின் சக்தி.
கவிதை என்பதில், கவிஞன் பாதியை சொல்ல வேண்டும்; படிக்கும் வாசகன் மீதியைச் சொல்ல வேண்டும். இந்தியா முழுக்க பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஒன்றாக வளர்ந்த மரபு, நமது இலக்கியங்களில் இன்றும் காக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசுகையில், "எத்தனையோ புத்தகங்களுக்கு போதிய மதிப்பீடு கிடைக்கிறது; சில புத்தகங்களுக்கு அது கிடைப்பதில்லை. அரிய, புதிய தரமான படைப்புகளுக்கு அந்த அடையாளம் கிடைக்காமல் அழிந்து போகின்றன' என்றார். எழுத்தாளர் தங்கப்பா, லண்டனைச் சேர்ந்த தமிழ் இதழ் வெளியிடும் சிவானந்த ஜோதி, "கனவு' சிற்றிதழ் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன், நாட்டுப்புற இலக்கிய ஆராய்ச்சியாளர் விஜயலட்சுமி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
இலக்கிய விருது - 2010, கவிதைப் பிரிவில் சுமதிராம் (கோடிட்ட இடங்களை நிரப்புதல்), செல்வி (தார்க்குச்சி), நாவல் பிரிவில் பொன்னீலன் (மறுபக்கம்), கட்டுரைப் பிரிவில் ரெங்கையா முருகன், ஹரி சரவணன் (அனுபவங்களின் நிழல்பாதை) மொழிபெயர்ப்பு பிரிவில் ராமன் (மருந்து), சிறுவர் இலக்கியம் பிரிவில் ஞானப்பிரகாசம் (சாதனைச் சான்றோர்கள்), இதர பிரிவில் (வரலாறு) ப்ரியாராஜ் (சென்னையின் கதை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன், விருதுகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE