ப.வேலூர் : நில அபகரிப்பு வழக்கில், பரமத்தி ராகா ஆயில் நிறுவன பங்குதாரரும், சசிகலா உறவினர் ராவணனின் நெருங்கிய நண்பருமான தமிழ்மணியை, பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர். அ.தி.மு.க.,வில், அதிகார மையமாகச் செயல்பட்டு வந்த ராவணன், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பரமத்தியை சேர்ந்த தமிழ்மணி ஆகியோர், வேளாண் பல்கலையில் ஒன்றாகப் படித்தவர்கள்.
கல்லூரி நட்பு விரிவடைந்து, கோவையில் தொழில் துவங்கும் அளவுக்கு வளர்ந்தது. பரமத்தியில், "ராகா' என்ற பெயரில், ஆயில் நிறுவனத்தை, கடந்த 1997ம் ஆண்டு ராவணனும், தமிழ்மணியும் சேர்ந்து துவங்கினர். ராவணனின் நட்பைக் கொண்டு, கட்சியில் எவ்வித பொறுப்பும் இல்லாத தமிழ்மணி, அ.தி.மு.க.,வில் தனது, "பவரை' நிலைநாட்டினார்.
அதன்படி, ஈரோடு மேயர் தேர்தலில், தமிழ்மணி கூறிய நபருக்கே, மேயர் "சீட்' வழங்கப்பட்டதாகவும், பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவராக உள்ள பிரபாகரனை தேர்வு செய்ததே தமிழ்மணி தான் என்றும் கூறப்படுகிறது. மேலும், பணம் பெற்றுக்கொண்டு, பலருக்கு கட்சிப்பதவி வாங்கித்தரப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், காரமடையை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமார் என்பவரை கடத்தி, கொலை மிரட்டல் விடுத்து, 10 லட்ச ரூபாய் பறித்துக்கொண்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில், கடந்த 27ம் தேதி, ராவணனை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது, கோவை வடவள்ளியில் நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
அதில், பரமத்தியை சேர்ந்த தமிழ்மணிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்மணி தலைமறைவானார். கோவை வடவள்ளி போலீஸ் எஸ்.ஐ., மணி தலைமையிலான தனிப்படை போலீசார், தமிழ்மணியை தீவிரமாகத் தேடி வந்தனர்.
தலைமறைவான தமிழ்மணி, பரமத்தியில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக, பரமத்தி போலீசுக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார், நேற்று காலை 11.30 மணிக்கு, தமிழ்மணி வீட்டுக்குச் சென்று, தமிழ்மணி மற்றும் அவரது மேலாளர் குலோத்துங்கன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, கோவை கொண்டு சென்றனர்.
அ.தி.மு.க.,வில், அதிகார மையத்தில் வலம் வந்த சசிகலா உறவினர் ராவணன் கைதுக்குப்பின், நில அபகரிப்பு வழக்கில், அவரது நெருங்கிய நண்பர் தமிழ்மணி கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழ்மணி மூலம் கட்சிப் பதவி மற்றும் உள்ளாட்சி பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க.,வினர் பீதி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE