பொது செய்தி

தமிழ்நாடு

குண்டும் குழியுமான சாலை, குவிந்து கிடக்கும் குப்பை

Added : பிப் 02, 2012
Advertisement

சேலம் : சேலம் மாநகராட்சி, 22 வது வார்டுக்குட்பட்ட ஆண்டிப்பட்டியில், குண்டும் குழியுமான சாலை மற்றும் குவிந்து கிடக்கும் குப்பை ஆகியவற்றால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
சேலம் மாநகராட்சி சார்பில், போடப்படும் சாலைகள் குறைந்தப்பட்சம் ஆறு மாதங்களுக்கு கூட தாங்குவதில்லை. கான்டிராக்டர்களின் அலட்சியம், அதிகாரிகளின் கண் மூடித்தனம் ஆகியவற்றால், பல வார்டுகளில், சாலைகள், "பல்லை' இழித்து கொண்டிருக்கிறது.
முறையாக மேற்கொள்ள வேண்டிய, "பேட்ஜ்' ஒர்க் பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பல சாலைகளில், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அதேப்போல, குப்பை விவகாரத்தால், பொதுமக்கள் மட்டும் அல்லாமல், மாநகராட்சி நிர்வாகமே சிக்கி தவிக்கிறது. மாநகரின் ஏதாவது ஒரு பகுதியில், குப்பை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தரமில்லாத சாலை, தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்ட பிரச்னைகளால், மாநகராட்சி, 22 வது வார்டுக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பகுதி வாழ் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டிப்பட்டி, சேலத்தாம்பட்டி, காட்டூர், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து சிவதபுரம் செல்லும் சாலை, இருப்பதே தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளது.
நடந்து கூட செல்ல முடியாத அந்த வழித்தடத்தில், காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பல மாணவர்கள், வேறு வழியில்லாமல், 2 கி.மீ., தூரம் சுற்றி கொண்டு, போடிநாயக்கன்பட்டி வழியாக, சிவதாபுரத்துக்கு செல்கின்றனர்.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை ஒட்டி உள்ள ரயில் வழித்தடத்துக்கு அருகில், டன் கணக்கில், கொட்டப்பட்ட குப்பைகள் அப்புறப்படுத்தப்படவில்லை. ஆடு, மாடு மேய்க்க வரும் நபர்கள் சிலர், அடிக்கடி குப்பைகளை பற்ற வைத்து விடுகின்றனர்.
அதில் இருந்து வெளியேறும் புகை, அப்பகுதி முழுவதையும் சூழ்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஆண்டிப்பட்டி பகுதியில், முறையான குப்பை தொட்டி வசதி ஏற்படுத்தப்படவில்லை. பல இடங்களில் ரோட்டிலேயே குப்பை தேங்கி கிடக்கிறது.
சாலை வசதி, குப்பை பிரச்னை ஆகியவற்றை தீர்க்க கோரி, மாநகராட்சி அலுவலகம், கவுன்சிலர்கள் என்று பலரிடம் நேரடியாக பல முறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டிப்பட்டி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பிரச்னை குறித்து, 22 வது வார்டு கவுன்சிலர் பொன்னி கூறியதாவது:
நான் கவுன்சிலராக பொறுப்பேற்று மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் எப்படி இந்த பிரச்னையை தீர்ப்பது. தற்போது தான், இரண்டு குடிநீர் தொட்டியை வைக்க அனுமதி வாங்கப்பட்டுள்ளது. சிவதாபுரம் செல்லும் வழியில், சில மாவு மில்கள் உள்ளன. அங்கு, லோடு ஏற்றி, இறக்குவதற்காக, "டாரஸ்' லாரிகள் வருவதால், ரோடு சீரழிந்துள்ளது. மில்களை நம்பி பல்வேறு குடும்பங்கள் உள்ளது. அதனால், உடனடியாக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அந்த பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. மல்லமூப்பம்பட்டிக்கு அருகில் தான் குப்பைகள் கொட்டப்படுகிறது. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம், பிரச்னை குறித்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X