இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்வதற்காக, "இன்டர்போல்' உதவியை நாடப் போவதாக, பாக்., அரசு தெரிவித்துள்ளது.
பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முஷாரப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், அவர் தேடப்படும் குற்றவாளியாக, லாகூர் பயங்கரவாதத் தடுப்பு கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என, பாக்., அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில், 2007ல், கராச்சியில் நடந்த கலவரத்தில், 50 பேர் பலியான வழக்கில், நேரில் ஆஜராகும்படி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, சிந்து மாகாண ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முஷாரப்பை கைது செய்து, மீண்டும் பாகிஸ்தானுக்கு கொண்டு வரும் முயற்சியில், பாக்., மத்திய புலனாய்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சர்வதேச போலீசான "இன்டர்போல்' மூலம், முஷாரப்பைத் தேடுவதற்காக, "சிவப்பு நோட்டீஸ்' விடுக்கும் முயற்சியில், அத்துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து, பாக்., உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், "இதற்கான வேலைகள் துவங்கி விட்டன. இதன் மூலம், முஷாரப்பை கைது செய்து, பாகிஸ்தானுக்கு கொண்டு வருவோம்' என்றார்.