நகரி:வெளிநாடுகளிலிருந்து வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை சேர்ந்த, மேற்கு வங்க மாநிலத்தவர் கூறிய தகவலின்படி, மூன்று பேரை, திருப்பதி போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்கம் மால்டா மாவட்டம், பைஸ்னம் நகரை சேர்ந்த முகம்மது கமருல் அலி,20, முகம்மது ரபிஉல் இஸ்லாம்,21, முகம்மது ரஜாஉல் அலி,20, பாதல் அலி,24, ஆகிய நால்வரும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன், கோல்கட்டாவிலிருந்து, ஏழு லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை எடுத்துக் கொண்டு, திருப்பதிக்கு வந்தனர்.
இக்கும்பல், ஆந்திராவில் குண்டூர் டவுன், சித்தூர் மாவட்டம், புங்கனூரு, கர்நாடக மாநிலம் மூலபாகல், சிந்தாமணி போன்ற இடங்களுக்கு சென்று, ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை, இந்த நகரங்களில் உள்ள சிறிய கடைகளில் மாற்றுவது, அங்கிருந்து வேறு ஊர்களுக்கு சென்று வருவது, போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த பாதல்அலி என்பவர், கடந்த, 14ம் தேதியன்று, திருப்பதி போலீசாரிடம் சிக்கினார். இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இவருடன் மேற்கு வங்கத்திலிருந்து வந்த மேலும் மூவர், திருப்பதி பகுதியில் கள்ள நோட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பதி அர்பன் எஸ்.பி., பிரபாகரராவ், இந்த கும்பலை கண்டுபிடிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டார். திருப்பதியிலிருந்து சந்திரகிரி செல்லும் சாலையில், ஸ்ரீவாரிமெட்டு அருகே, கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மூவரையும், திருப்பதி போலீசார் கடந்த செவ்வாயன்று கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நல்ல நோட்டுகளையும், மூன்று மொபைல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திடுக் தகவல்: நிருபர்களிடம் பேசிய எஸ்.பி., பிரபாகரராவ் கூறியதாவது:மேற்கு வங்க கள்ள நோட்டு கும்பலிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து, மேற்கு வங்க மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டு, முக்கிய நகரங்களில் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு, இந்த கும்பலிடம் அளித்ததாக தெரிய வந்துள்ளது.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கள்ளநோட்டை மாற்றினால், இவர்கள், 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே, அந்த தொகையில் செலவு செய்து மீதித் தொகையை, கள்ள நோட்டுகளை இவர்களுக்கு சப்ளை செய்தவர்களிடமே அளித்து விட வேண்டும்.
அதன்பின், கள்ள நோட்டுகளை இவர்களுக்கு அளித்த ஆசாமிகள், 20 சதவீத தொகையை கமிஷனாக அளிப்பர். இக்கும்பலுக்கு, கள்ள நோட்டுகளை சப்ளை செய்த ஆசாமிகளை பிடிக்க, தீவிரமாக விசாரணை நடக்கிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE