கோவை: கோவை காளப்பட்டி அருகே, 2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய, முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.காளப்பட்டி பேரூராட்சிக்குட் பட்டது, கைக்கோள்பாளையம் கிராமம். இப்பகுதியில் உள்ள, கருப்பெருமாள் குட்டை நீர்நிலையில், 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பெருங்கற்கால, ஈமச்சின்ன பகுதிகளும் கண்டறியப்பட்டன.இப்பகுதியில், மாணவர்களுடன் ஆய்வு மேற்கொள்ளும், பி.எஸ்.ஜி., கல்லூரி இணைப் பேராசிரியர் ரவி கூறியதாவது:காளப்பட்டி அருகே, மாரப்ப கவுண்டரின் தோட்டத்தில், முதுமக்கள் தாழி, மட்கலங்கள் கண்டறியப்பட்டன. இதனுடன், மேலும் சில மட்கலச் சில்களும், சேகரிக்கப்பட்டன. இதில், கொங்கு நாட்டின் வண்ணப்பூச்சு, வரிக்கோடுகளும் இருந்தன. இவை, சிவப்பு மற்றும் சிவப்பு கருப்பு நிறங்களில், இருந்தன.தோட்டத்தில், கல்லறைகள் கொண்டு, கல்திட்டைகள் அமைந்த, ஈமச்சின்னங்கள் உள்ளன. வாழ்வியல் பகுதிகளில், இரும்பை உருக்கி பயன்படுத்தியதற்கான, இரும்பு கசடுகள் கண்டறியப்பட்டன. இப்பகுதியில் கிடைத்த, முதுமக்கள் தாழி, 65 செ.மீ., உயரமும், 29 செ.மீ., குறுக்களவும், 58 செ.மீ., நடுவட்டமும், ஒன்றரை செ.மீ., தடிமனும் கொண்ட, உறுதியான சிவப்பு வண்ணம் பூசப்பட்ட, சுடுமண் தாழியாக உள்ளது. சிறிய வாயுடைய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், குவளைகள், புகைப்பிடிப்பான்கள், குடுவைகள் மற்றும் தாங்கிகள், கிடைத்துள்ளன.இவ்வாறு, ரவி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE