இஸ்லாமாபாத்:இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, சியாச்சின் பனி மலைப் பகுதியில், பனிப்பாறைகள் சரிந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாம் மீது விழுந்ததில், 135 பேர் பலியாகினர்.இந்திய-பாகிஸ்தான் எல்லையில், சியாச்சின் பனி மலைப் பகுதி உள்ளது. இதில், பாகிஸ்தானின் சியாச்சின் பகுதியில் ஜியாரி என்ற இடத்தில், அந்நாட்டு ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. நேற்று காலை, 6 மணி அளவில், இந்தப் பகுதியில், திடீரென பனிப் பாறைகள் சரிந்து, ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது விழுந்தது.
இதில், கர்னல் ஒருவர் உட்பட பாக்., ராணுவ வீரர்கள் 135 பேர், பனிப்பாறைகளின் அடியில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் கூறுகையில், ""சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணியில், பாக்., ராணுவத்தினரும், ஹெலிகாப்டர்களும், மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஜியாரி ராணுவ முகாம், பாகிஸ்தான் ராணுவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முகாம். இங்கு ஒரு கட்டத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, இரு பகுதியில் படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது,'' என்றார். சியாச்சின் பனிமலைப் பகுதி, உலகிலேயே மிக அதிக உயரமான, அதேநேரத்தில், அதிக குளிர் நிறைந்த போர்க்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE