ஈரோடு: பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் பத்து பேர், சிறந்த தனியார் பள்ளியில் படிப்பதற்கான செலவை அரசு ஏற்கவுள்ளது. ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள், மூன்று மாணவியர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர், இரண்டு மாணவியர் என மொத்தம் பத்து மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைச்சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பெற அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் உதவி பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 28 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டாண்டுக்கு 56 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுடைய மாணவ, மாணவியர் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் விண்ணப்பத்தை கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.