* மும்பையிலுள்ள மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில், சார்டர்ட் இன்ஜினியர்ஸ் எக்ஸாமினேஷன் என்று அறியப்படும், அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன்மூலம் எனக்கு அரசுப் பணி கிடைக்குமா?
நீங்கள் எப்போது அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றீர்கள் என்பதைப் பொறுத்தது இது. கடந்த 2002-2006ம் ஆண்டுகளுக்கிடையில், IME வழங்கும் படிப்புகளின் அங்கீகாரத்தை இந்திய அரசு ரத்து செய்திருந்தது. ஆனால் 2006ம் ஆண்டு திரும்பவும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே, நீங்கள் 2006ம் ஆண்டிற்குப் பிறகு தேர்ச்சி பெற்றிருந்தால், நீங்கள் அனைத்துவித அரசுப் பணிகளுக்கும், PSU பணிகளுக்கும் தகுதியுடையவர் ஆகிறீர்கள். மேலும், நீங்கள் உயர் கல்வியும் மேற்கொள்ளலாம். ஆனால், நீங்கள் சேரும் பல்கலையானது, உங்களின் கல்வித் தகுதியை அங்கீகரிக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற பி.இ/பி.டெக் படிப்புகளை போலன்றி, அசோசியேட் தேர்வுகள் என்பவை, தொழில்துறை சான்றிதழ்களுக்கானவை. எனவே, உயர்கல்விக்கான தகுதி என்பது, அந்தந்த தனிப்பட்ட பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தது.
* எனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது? அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்?
பல புகழ்பெற்ற பயோடெக்னாலஜி கல்லூரிகள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. அதேசமயம், ஏறக்குறைய அனைத்துக் கல்லூரிகளும் முதுநிலைப் படிப்பிலேயே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் சேர, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
நீங்கள் இளநிலை அளவில், Botony அல்லது Zoology போன்ற படிப்புகளைப் படிக்க வேண்டும் மற்றும் வேதியியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களை துணைநிலைப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், இளநிலைக் கல்வியை நல்ல கல்லூரியில் படிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், சிறப்பான அடித்தளமே, உங்களின் எதிர்கால பயோடெக்னாலஜி சாதனைக் கனவை நனவாக்கும்.
இரண்டாம் வருட பட்டப்படிப்பை மேற்கொள்கையில், கம்ப்யூட்டிங் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவும். ஒரு டேட்டாபேஸ் தொழில்நுட்பம் மற்றும் ஒரு ப்ரோகிராமிங் மொழி ஆகியவற்றை சிறப்பாக கற்றுக் கொள்ளவும். ஏனெனில், பயோடெக் துறையில் நாம் பெறும் வெற்றியானது, நமது சிறப்பான கம்ப்யூட்டிங் அறிவைச் சார்ந்தது.
பொதுவாக, விஞ்ஞானிகள், இளநிலை பட்டப் படிப்பில், எந்தவித சிறப்பு படிப்பையும் மேற்கொள்ள பரிந்துரைப்பதில்லை. ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் முதுநிலையில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவியலின் பல அடிப்படை விதிகள் மற்றும் அம்சங்களை இளநிலையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.