தனியார் மின் நிறுவனத்திற்கு ஆதரவான ஆணைய உத்தரவு ரத்து: மின்சார தீர்ப்பாயம் அதிரடி| Electricity tribunal cancelled Commission orders in favor of private electric company | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மின் நிறுவனத்திற்கு ஆதரவான ஆணைய உத்தரவு ரத்து: மின்சார தீர்ப்பாயம் அதிரடி

Added : மே 24, 2012 | கருத்துகள் (10)
Share
புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, "இந்த் பாரத்' என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடி மாவட்டம் சுவாமி நத்தம் என்ற இடத்தில், தலா 150 மெகாவாட் வீதம், இரண்டு நிலையங்களை அமைத்துள்ளது. யார் செலவு செய்வது? இந்த நிலையத்தில்
தனியார் மின் நிறுவனத்திற்கு ஆதரவான ஆணைய உத்தரவு ரத்து: மின்சார தீர்ப்பாயம் அதிரடி

புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.


சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, "இந்த் பாரத்' என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடி மாவட்டம் சுவாமி நத்தம் என்ற இடத்தில், தலா 150 மெகாவாட் வீதம், இரண்டு நிலையங்களை அமைத்துள்ளது.


யார் செலவு செய்வது? இந்த நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின் வாரிய மின்தடத்துடன் இணைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதற்காக, நிலையத்தில் இருந்து, 6 கி.மீ., தூரத்திலுள்ள மீளவிட்டான் துணைமின் நிலையத்திற்கும்; அருப்புக்கோட்டையிலுள்ள துணைமின் நிலையத்திற்கும்; மீளவிட்டானில் இருந்து, செக்கானூரணிக்கும், மொத்தம் மூன்று மின் தடங்கள் அமைக்க முடிவானது. இதற்கான செலவை, மின் வாரியம் ஏற்க வேண்டுமா அல்லது தனியார் மின் நிலையம் ஏற்க வேண்டுமா என்பது குறித்த வழக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் விசாரிக்கப் பட்டது. கடந்த ஆண்டு, ஏப்ரலில் தீர்ப்பளித்த ஆணையம், "தனியார் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாத நிலையில், மின்தொடர் அமைக்கும் செலவை, மின் வாரியமே ஏற்க வேண்டும்,' என உத்தரவிட்டது.


புதிய உத்தரவு: இதை எதிர்த்து, புதுடில்லியிலுள்ள மின்சார தீர்ப்பாயத்தில், தமிழக மின் வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை, நீதிபதி கற்பக விநாயகம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, நேற்று தீர்ப்பளித்தது.


அதன் விவரம்: இந்திய மின்சார சட்டம் 2003ன் படி, தனியார் மின்நிலையங்கள் கண்டிப்பாக, தங்களுக்கான மின் தடங்களை சொந்தமாக அமைத்து, இயக்கி, பராமரிக்க வேண்டும். இதற்காக, யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. அதேநேரம், மாநில மின்சார அரசு நிறுவனங்கள், மின் தொடரமைப்பு நிறுவனம் மற்றும் திறந்தவெளி மின் தட இயக்க விதிகள் மற்றும் சட்டங்களை பின்பற்றி, மின்தடங்களை அமைத்து, இயக்க வேண்டும். இதேபோல், பாதுகாப்பு தொடர்பாக, ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு தடங்கள் பாதிக்காத வகையிலும், விபத்து தடுப்புக்கான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, தனியார் மின் நிறுவனங்கள் மின்தொடர்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


ஆணையத்திற்கு குட்டு: மேலும் தீர்ப்பு விவரம் வருமாறு: தனியார் மின் நிறுவனங்கள் தனிப்பட்ட மின்தடங்கள் அமைக்க, முழுச்செலவையும், அவர்களே ஏற்க வேண்டும். இதற்கு, அரசு மின்தொடர் நிறுவனம் மற்றும் மின் பகிர்மான கழகம் பொறுப்பாகாது. தங்களால் அந்த பணியை செய்ய முடியாவிடில், தொழில்நுட்பரீதியாக, அரசு மின் நிறுவனத்தின் உதவியை பெற்று, மின்தடங்களை அமைத்துக் கொள்ளலாம். எனவே, இந்த் பாரத் நிறுவனம், தூத்துக்குடியில் அமைக்க வேண்டிய மின் தடத்திற்கு, முழுச்செலவையும், அவர்களே ஏற்க வேண்டும். இதற்கு, தமிழக மின் வாரியம் பொறுப்பேற்க முடியாது. இதுகுறித்த வழக்கில், விதிகளை பின்பற்றாமல், தனியார் மின் நிறுவனத்திற்கு சாதகமாக, மாநில ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.


நிதியை திரும்ப பெறுமா மின் வாரியம்? இந்த் பாரத் நிறுவனத்திடமிருந்து, மின்சாரத்தை பெறும் வகையில், மின்சார வாரியத்தின் சார்பில், தனியாருக்கான மின் தடம் அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக, 140 மீட்டர் நீளத்திற்கு, மின் தடம் அமைக்க குறைந்தது, 100 கோடி ரூபாய் செலவாகும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டு, முழுச்செலவையும், மின்சார வாரியமே செலவழித்து வருகிறது. தற்போது, மின் வாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், செலவு செய்த பணத்தை மின் வாரியம் திரும்பப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


- நமது நிருபர் -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X