பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமணலில் தொல்லியல் ஆராய்ச்சிக்குழு அகழாய்வு : தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிப்பு

Added : ஜூன் 01, 2012
Advertisement

சென்னிமலை : ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மிகவும் புராதன நகரமான கொடுமணலில், அகழாய்வுப் பணியில், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண் பானைகளும் கிடைத்துள்ளன. இவை, 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகிறது. சங்க காலத்தில் கொடுமணம் என அழைக்கப்பட்ட, கொடுமணல் கிராமம், நொய்யல் ஆற்றின் இடதுகரையில் உள்ளது. சேரர் தலைநகரான கரூர், முசிறி துறைமுகத்தை இணைக்கும் வணிகப் பெருவழியில் இவ்வூர் அமைந்துள்ளது. கொடுமணல் சங்க காலத்தே அணிகலன் தொழிலால் சிறப்புற்றிருந்தமை அறிய வருகின்றது. கொடுமணலில் நன்கலங்கள் செய்யப்பட்டன என்பதை "கொடுமணம் பட்ட...நன்கலம்' (பதிற்று: 67)எனக் கபிலரும், "கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்' (பதிற்று: 74) என்று அரிசில்கிழாரும் குறிப்பிடுகின்றனர். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கொடுமணல் பகுதியை முதல் முதலாக, 1961ல் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த சீனிவாச தேசிகன், கள ஆய்வில் கண்டுபிடித்தார். அதன் பின், 1980ல் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை சோதனை முறையாக சிறிய அளவில் ஆய்வு மேற்கொண்டது.
தொடர்ந்து, தமிழ் பல்கலை கல்வெட்டியல் துறையைச் சார்ந்த புலவர் செ.ராசு, கொடுமணலில் மேற்கொண்ட தொடர் கள ஆய்விலும் தொடர்ந்து, 1985, 1986, 1989, 1990ம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொண்டதிலும் கொடுமணலின் முக்கியத்துவம் வெளிக்கொணரப்பட்டது. தற்போது, மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனங்களின் உதவியுடன், புதுச்சேரி பல்கலையின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் ராஜன் தலைமையில், வரலாற்றுத் துறையைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான சதீஸ்குமார், செல்வகுமார், ரமேஷ், பெருமாள், பாலமுருகன், பி.ரமேஷ், நந்தகுமார் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களாக, அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த, ஊரிருக்கை பகுதியில் நான்கு ஆய்வுக்குழிகளும், ஈமக்காட்டில் இரு பெருங்கற்படைச் சின்னங்களும் அகழாய்வு செய்யப்பட்டன. இந்த அகழ் ஆய்வில், இவ்வூரின், 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன. இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், இரும்பு, எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும், கண்ணாடி மணிகள் மற்றும் செம்பு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது தவிர நெசவுத் தொழில் செழிப்புற்றிருந்ததை, நூல் நூற்கப் பயன்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்றிருந்தமையை இங்கு கிடைக்கும் சங்கு வளையல்கள், மணிகள் கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகிறது. ஒரு அகழாய்வுக்குழியில், 170க்கும் மேற்பட்ட சங்குகள் குவிக்கப்பட்டு இருந்ததன் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன. கொடுமணல் பகுதியில் பெரும்பாலானவை பச்சைக்கல் என்று அழைக்கப்படும் பெரில், நீலக்கல் என்று அழைக்கப்படும் சபையர், வைடூரியம் என்று அழைக்கப்படும் லே பிஸ்லோ. சுலி, பளிங்கு கல் என்று அழைக்கப்படும் குவாட்ஸ், ஊதா நிறத்திலுள்ள அமதிஸ்ட், சூதுபவளம் என்று அழைக்கப்படும் கார்னீலியன் மற்றும் அகேட், பிளாக்கேட் , ஜாஸ்பர், ஒனக்ஸ் போன்ற கற்களால் உருவாக்கப்பட்ட கல்மணிகள் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட மண் பானைகள் இங்கு கிடைத்துள்ளன. இதுவரை, 130க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட மண்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளது என்கிறார் பேராசிரியர் ராஜன்.

மேலும் அவர் கூறியதாவது: சங்க காலத்தில் வாழ்ந்த மக்களில், சம்பன் ஸீ மநன் திஸ்ஸான், ஊரானன், ஸிலிகன், ஸந்துவன், பெரியன் ஸாதன், சம்பன், மாத்தன், சபாமந்தை பம்மாத(ந்) போன்ற ஆட்பெயர்கள், அக்கால சமூகத்தின் புதிய பரிணாமத்தை விளக்குவதாக உள்ளன. ஈமக்காட்டில் இரு பரலுயர் பதுக்கை என்று அழைக்கப்படும் பெருங்கற்படைச் சின்னங்கள் அகழாய்வு செய்யப்பட்டன. நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட இக்கல்லறைகள் கல்வட்டத்தின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கல்லறையின் முன்பு முற்றம் போன்ற பகுதி காணப்படுகிறது. இம்முற்றத்தின் எதிரே மேலும் இரண்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையும் நீள் செவ்வகம், வட்டம் மற்றும் சாவி துவாரம் போன்ற வடிவிலான இடுதுளைகள் காணப்படுகின்றன. இக்கல்லறைகள், 10 டன்னுக்கு மேலான எடை கொண்ட பலகை கற்கள் மூடப்பட்டுள்ளன. இக்கல்லறைகளில், 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புகளும், அவனுக்காக ஈமப்பொருள்களாக வைக்கப்பட்ட அரிய கல்மணிகள், இரும்பிலான கத்திகள், கேடயம், அம்பு முனைகள், வாள் போன்றவைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பண்டைய காலத்தில் நீத்தோருக்கு அளிக்கப்பட்ட மரியாதை நமக்கு புலப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் சங்க காலத்தில் கொடுமணல் ஒரு மிகச் சிறந்த வணிக நகரமாக திகழ்ந்துள்ளதை உறுதி செய்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த வைடூரியம், மகாராஷ்டிரா, குஜராத்தைச் சார்ந்த அகேட், கார்னீலியன், இலங்கையைச் சார்ந்த பிளக்கேட் அய் போன்ற அரிய கல்மணிகள் இங்கு கிடைப்பது, இவ்வூர் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கியமை புலப்படுகிறது. இவ்வாறு ராஜன் கூறினார்.

இப்பகுதியில் அகழாய்வை இன்னும் பரந்த அளவில் மேற்கொண்டால் சங்க காலச் சமுதாயத்தின் பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளும் வெளிப்படும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் துறை ஆய்வாளர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X