"மனித நேய சேவையில் தமிழகம் முன்னோடி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"மனித நேய சேவையில் தமிழகம் முன்னோடி'

Added : ஜூலை 28, 2010

சென்னை : ஸ்ரீமாதா டிரஸ்ட் காப்பகத்தின் 11வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் கலந்து கொண்டு, புற்று நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கி பேசினார்.இவ்விழாவில், ஸ்ரீமாதா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கினார். தாம்பரம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில், கடைசி கட்ட நிலையத்தில் இருக்கும் புற்று நோய்களுக்கு காப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், இந்நிலத்தை இலவசமாக வழங்குமாறு, விழாவில் கலந்து கொண்ட மேயரிடம் கேட்டு கொண்டார். விழாவில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் சுப்ரமணியன், ஸ்ரீமாதா டிரஸ்டின் சமையலறை மற்றும் சாப்பிடும் இடத்தை பார்வையிட்டார். பின் பார்வையாளர்கள் பதிவேட்டில் டிரஸ்டின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் கருத்துகளை பதிவு செய்தார்.பின்னர், ஸ்ரீமாதா டிரஸ்டின் மனித நேய சேவையை பாராட்டி பேசினார். மேலும், புற்று நோயாளிகளுக்கான காப்பகம் அமைக்க தேவையான நிலத்தை, அரசிடம் பெற்றுத்தர தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக ஏற்றுக்கொண்டார்.ஸ்ரீ மாதா டிரஸ்டில் உள்ள நோயாளிகள் சிரித்து மகிழ, சிரிப்பு சேனல்களுடன் கூடிய ஐந்து, "டிவி'களை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். மேலும், நோயுற்ற ஏழை மக்களுக்கு அரசின் சிறப்பு திட்டங்களை விளக்கினார்.தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்குதல், அவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்குதல், தெருவில் ஆதரவற்று திரியும் மன நோயாளிகளுக்கு அடைக்கலம் அளித்தல், மருத்துவ சிகிச்சை வழங்குதல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலை அகற்றுதல், இலவசக் காப்பீட்டுத் திட்டம் என, பல்வேறு மனித நேய சேவைகளில், மற்ற மாநிலங்களுக்கு, தமிழக அரசு முன்னோடியாக விளங்குவதாக கூறினார்.நிகழ்ச்சியில் ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, உரத்த சிந்தனை சங்கத்தின் பொதுச் செயலர் உதயம்ராம்,"மயிலை எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் விஜய ஸ்ரீ மற்றும் தர்மசாலாவில் பணியாற்றும் சமூக சேவகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X