அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்| Vajpayee wanted to induct Kalam as minister in NDA govt: Book | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்

Added : ஜூலை 03, 2012 | கருத்துகள் (12)
Share
அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்,Vajpayee wanted to induct Kalam as minister in NDA govt: Book

புதுடில்லி : கடந்த 1998ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போது, அப்துல் கலாமை அமைச்சராக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார். ஆனால், அவரின் அழைப்பை கலாம் ஏற்றுக் கொள்ளவில்லை.


இதுதொடர்பாக, "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளதாவது:நான், கடந்த 2002ல், ஜனாதிபதியானேன். அதற்கு முன்னதாக, 1998ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்த போது, என்னை அமைச்சராக்க, வாஜ்பாய் விரும்பினார். 1998 மார்ச் 15ம் தேதி, நள்ளிரவில், வாஜ்பாய் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமைச்சர்கள் பட்டியலை தான் தயாரித்துள்ளதாகவும், என்னை அமைச்சராக்க விரும்புவதாகவும் கூறினார். உடன், "நான் யோசிக்க அவகாசம் கொடுங்கள்' என, கேட்டுக் கொண்டேன். உடன் அவர், என்னை மறுநாள் காலை 9.00 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார்.


நண்பர்களுடன் ஆலோசனை:உடனே நான், அந்த இரவிலேயே, என்னுடைய நண்பர்கள் சிலரை அழைத்துப் பேசினேன். வாஜ்பாய் விடுத்த அழைப்பு குறித்து, அவர்களுடன் விவாதித்தேன். அதிகாலை மூன்று மணி வரை இந்த விவாதம் நடைபெற்றது. அப்போது என்னுடைய நண்பர்கள் எல்லாம், "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு திட்டங்களில் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், அவை எல்லாம் முன்னேற்றமான நிலையில், நல்ல பலன் தரக்கூடிய நிலையில் இருப்பதால், அப்போதைக்கு அமைச்சர் பதவியை ஏற்க வேண்டாம். அரசியலுக்கு செல்ல வேண்டாம்' என, கேட்டுக் கொண்டனர்.


வாஜ்பாயுடன் சந்திப்பு :அடுத்த நாள் காலை, நான், வாஜ்பாய் தங்கியிருந்த நம்பர்.7, சப்தர்சங் சாலை வீட்டிற்கு சென்றேன். அவரிடம், "நானும், என்னுடைய குழுவினரும், இரண்டு முக்கியமான திட்டங்களில் பங்கேற்றுள்ளோம். அதில், ஒன்று, அக்னி ஏவுகணை தயாரிப்பு திட்டம் மற்றும் அணுகுண்டு தயாரிப்பு திட்டம். இந்த இரண்டு திட்டங்களிலும் நான் முழு நேரமும் ஈடுபட வேண்டும் என, நினைக்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும். அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவித்தேன். நான் சொன்னதை ஏற்றுக் கொண்ட வாஜ்பாய், "என்னுடைய பணியைத் தொடரும்படி கூறினார். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்' என்றும் வாழ்த்தினார்.


நாட்டிற்கு பலன் :வாஜ்பாய் என்னை அமைச்சராக்க விரும்பிய நேரத்தில், நான் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தேன். அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்ததால், இரண்டு பெரிய திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்மூலம், நாட்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பின் பல விஷயங்கள் வேகமாக நடந்தன. அக்னி ஏவுகணை தயாரானது. தொடர்ச்சியாக ஐந்து அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்மூலம், அணுஆயுத நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றது.


துணைவேந்தர்:இதுமட்டுமின்றி, ஒரு முறை, தமிழக கவர்னர் சென்னா ரெட்டியும், என்னை அழைத்தார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகும்படி கேட்டுக் கொண்டார். எனது நியமனத்திற்கு அங்கீகாரம் அளிக்கும்படியும் அரசை கேட்டுக் கொண்டார். ஆனால், அப்போதைய பிரதமரான நரசிம்மராவ், பல முக்கிய திட்டங்களில் நான் பங்கேற்றிருந்ததால், என்னை அறிவியல் ஆலோசகராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X