புலியகுளம் விநாயகருக்கு ரூ.6 கோடியில் கற்கோவில் கோவைக்கு பெருமை தரும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலியகுளம் விநாயகருக்கு ரூ.6 கோடியில் கற்கோவில் கோவைக்கு பெருமை தரும்

Added : ஜூலை 30, 2010

கோவை : ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலை வீற்றிருக்கும் புலியகுளம் விநாயகர் கோவிலில் 84 அடி உயரத்தில் ஏழு நிலை ராஜகோபுரமும், கற்கோவிலும் அமையவிருக்கிறது. மொத்த திட்டமதிப்பீடான 6.18 கோடி ரூபாயில், ரூ.1.83 கோடியை இந்துசமய அறநிலையத்துறை வழங்கியுள்ளது.கோவை, புலியகுளத்திலுள்ள முந்தி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 1982ல் தேவேந்திர குல அறக்கட்டளையால் இக்கோவில் நிறுவப்பட்டது; இது, புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த உபகோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்திவிநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான சிலை. இச்சிலை, 1998ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் பல ஆயிரம் பேர் வழிபடுகின்றனர். ஆசியாவிலேயே பெரிய அளவிலான சிலை என்பதால், சுற்றுலா பயணமாக கோவை வரும் வெளிநாட்டினரும் பார்த்து வியந்து செல்கின்றனர். இக்கோவிலை மேம்படுத்த இந்துசமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவில் முகப்பில் 84 அடி உயரத்தில் ஏழு நிலைகளில் ராஜகோபுரமும், 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் மகா மண்டபமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மகாமண்டபத்தில் கோவில் அலுவலகம், மடப்பள்ளி, கூட்ட அரங்கம் உள்ளிட்டவை அமையும். இதற்காக 6 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கோவில் விரிவாக்க கட்டட கட்டுமான அமைப்பு, கோபுர அமைப்பை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைப் போன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை, கோவில் கட்டட கட்டுமான பணிக்கென்று ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மீத தொகையை பக்தர்களிடம் வசூலித்து பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டட கட்டுமான பணிகளை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை இணைகமிஷனர் அசோக் கூறுகையில்,""கோவில் கட்டுவதற்கான திட்டமதிப்பீட்டில் 1.83 கோடியை அரசு வழங்கியுள்ளது. மீத தொகையை திரட்ட திருப்பணி நன்கொடையாக பக்தர்களிடம் பெற தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நிதி வழங்கும் நன்கொடையாளர்களுக்கு உரிய ரசீது கொடுத்து தொகை வசூலிக்கப்படும்,'' என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X