பொள்ளாச்சி: கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதாக, இந்து நரிக்குறவர் சமூகத்தினர், குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஐந்து கிராமங்களில், இந்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் உள்ளனர். இச்சமூகத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆர்.பொன்னாபுரத்தில் வசிக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கிறிஸ்துவ மதத்தினர், இந்து குறவர் இனத்தை சேர்ந்தவர்களை, மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஐந்து நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்,கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனராம். இச்சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பகல் நேரத்தில் வேலைக்கு சென்றவுடன், ஊருக்குள் கிறிஸ்தவ மத போதகர்கள் நுழைந்து, பெண்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், பிஸ்கட் தந்தும், மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த தேசிங்கு, ராஜேந்திரன், இந்து முன்னணி அமைப்பு மாவட்ட செயலர் உள்ளிட்டோர், நேற்று நடந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.