சென்னை:தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியை, கவுன்சிலிங் பட்டியலில் சேர்க்க, அண்ணா பல்கலைக்கு உத்தரவிட, சென்னை ஐ கோர்ட் மறுத்து விட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில், அருணை பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. கல்லூரியில் ஒரு தனி அறையில் மாணவர் ஒருவரை தேர்வு எழுத அனுமதித்ததாகவும், அவருக்கு கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டதாகவும், அவரது கல்லூரி வருகையில் கூட முறைகேடு நடத்தப்பட்டதாகவும், புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது. கல்லூரி ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பல்கலைக்கழகம் தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கு, கல்லூரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திருப்திடையாத அண்ணா பல்கலைக்கழகம், ஓராண்டுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்த பரிந்துரைத்தது.இதை எதிர்த்து, சென்னை ஐ கோர்ட்டில் அருணை பொறியியல் கல்லூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். அண்ணா பல்கலை தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர் ஆஜரானார். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:கவுன்சிலிங் பட்டியலில் சேர்ப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலையில் இருந்து இணைப்புக்கான (அபிலியேஷன்) உத்தரவை பெற, அருணை கல்லூரி தவறி விட்டது. 2011-12ம் ஆண்டுக்கான இணைப்பே கேள்விக்கு உட்பட்டு இருக்கும் போது, 2012-13ம் ஆண்டுக்கு இணைப்பு கிடைக்கும் என கருத முகாந்திரமில்லை. எனவே, 2011-12ம் ஆண்டுக்கான இணைப்பு இல்லாமல் இருக்கும் போது, கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும் என்கிற கேள்வி எழாது.ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களை சேர்ப்பதற்கான கல்லூரிகள் பட்டியலில், இந்தக் கல்லூரியையும் சேர்ப்பதற்கு தேவையான ஆவணங்களை கல்லூரி தரப்பில் வழங்கவில்லை என, அதிகாரிகள் சரியாக விளக்கியுள்ளனர்.
எனவே, அண்ணா பல்கலைக்கு உத்தரவிட முடியாது.முதுகலை படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையையும், ஏன் இந்த கல்வியாண்டில் நிறுத்தக் கூடாது என கேட்டு, மற்றொரு நோட்டீசையும் அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசிலும் குறுக்கிட முடியாது. பல்கலைக்கழகத்தின் அறிக்கையில், கல்லூரியில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொது நலன் கருதி, அதில் குறுக்கிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE