சென்னை:சிவகிரி ஜமீன் சொத்து வழக்கில், கோர்ட் வழங்கிய அனுமதி கடிதத்தை
தாக்கல் செய்யாததால், வழக்கு தொடுத்தவருக்கு மூன்று மாத சிறை தண்டனை
விதித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அவரது வழக்கறிஞருக்கு 50 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
பாண்டிய மன்னன் வழி வந்தவர் என கூறப்படும், வரகுண ராம பாண்டிய
சின்னதம்பியார் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில், சொத்துக்களை நிர்வகிக்க
அனுமதி கடிதம் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் என்.ஜெகநாதன் என்பவர் மனுத்
தாக்கல் செய்தார். மனுவோடு சேர்த்து உயில் விவரங்களும் இணைக்கப்பட்டன.
சுவிஸ் வங்கிஅதில், சிவகிரியார் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள
சொத்துக்கள், மற்றும் ராமேஸ்வரம், ராஜபாளையம், லண்டன், பாரிஸ், சென்னை, என
பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில்
பணம் டிபாசிட் செய்திருப்பதாக, அந்த உயிலில் கூறப்படவில்லை. ஆனால், சுவிஸ்
நாட்டைச் சேர்ந்த காசினா என்பவர் சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னனின் பணம்
இருப்பதாக, வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நிர்வாக அனுமதிக்கான கடிதம் கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்
செய்யப்பட்டது.
ஐகோர்ட்டும் 2004ம் ஆண்டு அனுமதி கடிதம் வழங்கியது.
அதைத்தொடர்ந்து இந்த அனுமதி கடிதத்தை ரத்து செய்யக் கோரி, சில மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணைக்குப் பின், அனுமதி கடிதத்தை ரத்து
செய்து, 2006ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது.கடிதத்தை கோர்ட்டில் தாக்கல்
செய்யுமாறு என்.ஜெகநாதனுக்கும், அவரது வழக்கறிஞருக்கும் ஐந்து முறை ஐகோர்ட்
உத்தரவிட்டது. இருந்தும் கடிதத்தை தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில்
பாண்டிய மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி சிலர், அனுமதி
கடிதத்தை ரத்து செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அவமதிப்பு
இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்'
விசாரித்தது. அனுமதி கடிதத்தை தாக்கல் செய்யுமாறு பல முறை உத்தரவிட்டும்,
அதை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, என்.ஜெகநாதனுக்கு எதிராக கோர்ட்
அவமதிப்பு வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
நிர்வாக அனுமதி கடிதத்தை தாக்கல் செய்யுமாறு மீண்டும், மீண்டும்,
உத்தரவிட்டோம். இதுவரை கடிதத்தை தாக்கல் செய்யவில்லை. ஆனால், ஜெகநாதனும்,
அவரது வழக்கறிஞரும், அந்தக் கடிதத்தை சுவிஸ் வங்கிக்கு காசினா மூலம்
அனுப்பியதாக தெரிவித்தனர். இருவரும் சேர்ந்து சட்ட நடைமுறையை தவறாக
பயன்படுத்துவதாக, இந்த கோர்ட் கருதியது.
இதையடுத்து, ஜெகநாதனிடம் குறுக்கு விசாரணை நடந்தது. குறுக்கு விசாரணையின்
போது, கடிதத்தை ஐகோர்ட்டில் இருந்து சொக்கலிங்கம் பெற்றதாகவும், தன்னிடம்
அதை தரவில்லை என்றும் கூறினார். வழக்கறிஞர் சொக்கலிங்கத்துக்கு தான் சுவிஸ்
வங்கியில் பணியாற்றிய காசினாவை தெரியும் என்றும் கூறினார்.
காசினா அனுப்பிய இ-மெயில் பற்றி வழக்கறிஞர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
அந்த இ-மெயிலை பார்க்கும் போது, நிர்வாக கடிதத்தை வங்கி பெற்றதாக
கூறப்படவில்லை. ஜெகநாதனும், அவரது வழக்கறிஞரும், அந்தக் கடிதம் சுவிஸ்
வங்கியில் இருப்பதாக கூறினர். எனவே, கோர்ட்டை ஜெகநாதனும், அவரது
வழக்கறிஞரும் ஏமாற்றியுள்ளனர்.
ஐகோர்ட் பல முறை உத்தரவிட்ட பின், வெளிநாட்டில் இருந்து அந்த கடிதத்தை
கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சுவிஸ் வங்கிக்கு கடிதத்தை
அனுப்ப, இந்த கோர்ட் அனுமதியளிக்கவில்லை. அந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல்
செய்ய, இருவரும் எந்த நடவடிக்கையும் எடுத்ததற்கான ஆவணமும் இல்லை.
அபராதம்
எனவே, என்.ஜெகநாதனும், அவரது வழக்கறிஞர் வி.சொக்கலிங்கமும், கோர்ட்
அவமதிப்பு செய்துள்ளனர் என நாங்கள் முடிவுக்கு வருகிறோம். ஜெகநாதனுக்கு
மூன்று மாத சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் அபராதத் தொகையை செலுத்தவில்லை
என்றால், கூடுதலாக ஒரு மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.வழக்கறிஞர் வி.சொக்கலிங்கத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் இதை செலுத்தவில்லை என்றால், ஒரு மாத
சாதாரண சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சொத்துக்கள் பட்டியல் அடங்கிய அரசு உத்தரவு, சி.பி.சி.ஐ.டி., அறிக்கை
மற்றும் ஆவணங்களை, மத்திய, மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். அப்பீல்
மனுக்கள் மீதான விசாரணை வரும் 2ம் தேதிக்கு பட்டியலிட வேண்டும்.இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு பிறப்பித்த பின், ஜெகநாதனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதால், சிறை
தண்டனையை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்
கேட்டுக் கொண்டார். அதையடுத்து, சிறை தண்டனையை மட்டும் ஒரு வாரத்துக்கு
நிறுத்தி வைத்து "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE