"காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு வர, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், "டில்லி, மும்பை மற்றும் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு தனி சரக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்' என்றும், லோக்சபாவில் தமிழக எம்.பி., öŒம்மலை கோரிக்கை விடுத்தார்.
நின்று போனது: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில், எரிவாயு கிடைக்கிறது. இதை, ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து வரும் நிலையில், சென்னைக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு அங்குலம் நீளத்திற்கு கூட குழாய்கள் அமைக்கப்படாமல், அந்தத் திட்டம், அப்படியே நின்று போனது.
ஒப்பந்தம் ரத்து: ஐந்தாண்டுகளாக பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், குழாய்கள் அமைப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்திருந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட, இந்த குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை, மத்திய அரசு நிறுவனமான, "கெயிலி'டம் விட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து, சேலம் லோக்சபா தொகுதி எம்.பி.,யான செம்மலை நேற்று லோக்சபாவில் பேசியதாவது: கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எரிவாயு, குழாய் மூலம் குஜராத், மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கப்படாமல் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட திட்டத்தை நடை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, தனியாக சரக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மும்பை - டில்லி; லூதியானா - கோல்கட்டா இடையே, தனி சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், உலக வங்கியின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களை அறிவித்த, அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சென்னைக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என, இதே சபையில் தெரிவித்தார்.
வாக்குறுதி: "சென்னை - மும்பை; சென்னை - டில்லி மற்றும் சென்னை - கோல்கட்டா இடையே, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு என, தனி ரயில் பாதை அமைக்கப்படும்' என்றும் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டுகளாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்களில் இருந்து சென்னைக்கு சரக்கு ரயில் போக்குவரத்து அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செம்மலை பேசினார்.
- நமது டில்லி நிருபர் -