எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்...? இசைஞானி இளையராஜாவுடன் சில நிமிடங்கள்

Added : ஆக 12, 2012 | கருத்துகள் (2)
Advertisement
இசையை ஏந்தி, மிதந்து வரும் காற்றலைகளில், இவரது நாதம் கட்டாயம் இழையோடும். ஒரு நாளில் 5 நிமிடமாவது, இவரது இசையை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது. இது இசை உலகின் வரலாறு; இயற்கையின் விதி. நம் வாழ்வின் ஆசைகள், நிராசைகள், வலிகள், ஏக்கங்கள், கொண்டாட்டங்கள், மகிழ்ச்சிகள் என அத்தனை அம்சங்களிலும் இவரது இசை, நமக்கு இதம் தரும் ஒத்தடம். "ஏட்டுல எழுதவில்ல; எழுதி வைச்சுப்
எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்...? இசைஞானி இளையராஜாவுடன் சில நிமிடங்கள்

இசையை ஏந்தி, மிதந்து வரும் காற்றலைகளில், இவரது நாதம் கட்டாயம் இழையோடும். ஒரு நாளில் 5 நிமிடமாவது, இவரது இசையை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது. இது இசை உலகின் வரலாறு;

இயற்கையின் விதி. நம் வாழ்வின் ஆசைகள், நிராசைகள், வலிகள், ஏக்கங்கள், கொண்டாட்டங்கள், மகிழ்ச்சிகள் என அத்தனை அம்சங்களிலும் இவரது இசை, நமக்கு இதம் தரும் ஒத்தடம்.


"ஏட்டுல எழுதவில்ல; எழுதி வைச்சுப் பழக்கமில்ல; இலக்கணம் படிக்கவில்ல. இந்ந நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ ?' என்பது போல இந்த இசை மகானின் இசை ஞானம்,


இயற்கையாகவே இவருக்குள்ளே ஊற்றெடுத்த பிரவாகம். இந்த பிரபஞ்சம் இயங்கும் வரை,


இவரது இசை மனிதகுலத்தை தாலாட்டிக்கொண்டே இருக்கும்.


"நேற்று இல்லை, நாளை இல்லை;


எப்பவுமே நான் ராஜா; கோட்டையில்லை,


கொடியும் இல்லை; அப்பவும் நான் ராஜா'- என்ற கவிஞர் வாலியின் வரிகள், இந்த "இசை ராஜாவுக்கு' மட்டுமே பொருந்தும். "இசை ஞானி' இளையராஜாவை தவிர, யாரையும் இப்படி தமிழ் உலகம் அறிமுகப் படுத்தாது.


பண்ணைபுரத்திலிருந்து சென்னைக்கு: தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், மிக ஏழ்மையான குடும்பத்தில், ராமசாமி- சின்னத் தாயம்மாள் தம்பதிக்கு 1943 ஜூன் 2ல் பிறந்தவர். வறுமை காரணமாக, வைகை அணை கட்டும் போது மண் சுமந்தவர். இசையே, ரத்தநாளங்களில் பரவிக்கிடந்ததால், வறுமையின் வலிகளை மறந்து, பதினான்கு வயது முதல் ஆர்மோனியம் சுமந்தார். சகோதரர்கள் பாவலர் வரதராஜன், கங்கை அமரனுடன் இணைந்து இந்தியா முழுவதும் கச்சேரி, நாடகங்கள் நடத்தினார்.


எப்படியாவது சென்னை சென்று, சாதிக்க வேண்டும் என அம்மாவிடம் ஆவலை வெளிப்படுத்த, அவரோ வீட்டில்இருந்த வானொலி பெட்டியை 400 ரூபாய்க்கு விற்று, வழியனுப்பி வைத்தார். அதுதான் இசைச்சகோதரர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. தமிழ் சினிமா உலகிற்கு புது இசை வடிவத்தை தந்தது.


இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் பாடல்கள், தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த நேரம். முதன்முதலில் 1976ல் "அன்னக்கிளி' படத்தில் இளையராஜா இசையமைப்பில், ஜானகி பாடி வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா...,' பாடல் பட்டி, தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. நாட்டுப்புற இசைச்சுவையோடு இந்த பாட்டு, "மக்களின் இசையாக' மாறி, சாமானியனையும் சங்கீதத்தின் பக்கம் திருப்பியது. தொடர்ந்து "16 வயதினிலே' உட்பட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 950 படங்களில் 4500 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.


லண்டன் பி.பி.சி., 155 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியதில், "தளபதி' படத்தில் இவரது இசையில் உருவான "ராக்கம்மா கையத்தட்டு...,'பாடல், உலகின் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. லண்டன் "ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில்' சிம்பொனிக்கு இசையமைத்த, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் (1993) இவர். "மேஸ்ட்ரோ' என அழைக்கப்பட இதுவே காரணம்.


ஓடாத படங்கள் எல்லாம், இவரது இசைக்காகவே ஓடியது. ஹீரோக்களுக்காக படங்கள் வெள்ளி விழா கண்ட நேரத்தில், ஒரு இசை அமைப்பாளருக்காகவே திரைப்படங்கள், தியேட்டர்களை விட்டு அகல மறுத்தன என்றால் அதுவும் இளையராஜாவுக்காகத்தான். கதாநாயகனுக்கு மட்டுமே "கட் அவுட்' வைத்து கொண்டாடிய தமிழ் ரசிகர் உலகம், இவருக்கும் "கட் அவுட்' வைத்து அழகு பார்த்தது.


"பூவே பூச்சூடவா' படத்திற்காக, இவரது இசையமைப்பிற்கு ஒப்புதல் பெற, பிரபல மலையாள இயக்குனர் பாசில், ஓராண்டு காத்திருந்தார் என்பது இன்னும் திரையுலகம் மறக்காத விஷயம். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை, 4 முறை வென்றார்.


திரைப்பட இசை அல்லாத, "பஞ்சமுகி' கர்நாடக செவ்வியலிசை ராகத்தை உருவாக்கினார். மாணிக்கவாசகரின் "திருவாசகத்தை', இசை வடிவில் வெளியிட்டார். "நாதவெளியினிலே', "பால்நிலாப்பாதை', "எனக்கு எதுவோ உனக்கும் அதுவே' உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியவர்.


அண்மையில் மதுரை வந்த இளையராஜா, நம்மோடு உரையாடியதில் இருந்து...


* பண்ணைப்புரம் ராசய்யா, "மேஸ்ட்ரோ' இளையராஜாவாக மாறியதை எப்படி பின்னோக்கி பார்க்கிறீர்கள்?


"மேஸ்ட்ரோ'வாக இருந்தாலும், பண்ணைப்புரத்து சிறுவனாகத்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறேன்.


* உங்களையும் பிரமிக்க வைத்த இசையமைப்பாளர்...


கடவுள்தான். அவர் ஒரே தாளத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என கோள்களை சுற்ற வைத்திருக்கிறார். ஒரு சுற்று "சரிகமபதநி' எனில், ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு தாளத்தில் சீராக சுற்ற வைக்கிறார். படைப்புகளில் என்னைப்போல் நீ இல்லை; உன்னைப்போல் நானில்லை.


கல்யாணி ராகம் மாதிரி, தோடி ராகம் இல்லை. தோடி மாதிரி, கல்யாணி இல்லை. ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. அதனால், இறைவன்தான் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்.


* திரைப்படத்தில் நடித்திருக்கலாம் என எண்ணியது உண்டா?


நான் இப்போதும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என தெரியவில்லையா (!) உங்களுக்கு?


* உங்கள் இசையில் வார்த்தைகளுக்கும், இசைக்கும் சமவாய்ப்பு கொடுத்தீர்கள். இன்று கணினி இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்புகளால், வார்த்தைகள் சிதைக்கப்படுவது பற்றி...


யார் சிதைக்கிறார்களோ, யாருடைய இசையில் இது நடந்து கொண்டிருக்கிறதோ, அவர்கள் சொல்ல வேண்டிய பதிலை நான் எப்படி சொல்வது? ஒரு பாடல் வெற்றியடைந்த பின், இம்முறைதான் சரியானது என அவர்கள் கூறினால், என்ன செய்ய முடியும்?


* நீங்கள் இசையமைக்க, அதிக நேரம் எடுத்துக்கொண்ட படம், பாடல்?


ஒரு படத்தின் அனைத்து பாடல்களுக்கும், இசைக் குறிப்பு எழுதி முடிக்க எனக்கு 30 நிமிடம் ஆகும். அதை பதிவு (ரிக்கார்டிங்) செய்யும் முன், இசைக்குறிப்புகளை இசைக்கலைஞர்களுக்கு வினியோகிக்க, ஒத்திகை பார்க்க அதிக நேரம் ஆகும். அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், ஒரு பாடல் பிரபலமாகும் என கூறமுடியாது. குறைந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பாடல், வெற்றி பெறாது என சொல்ல முடியாது. மலையாளத்தில் வெளியான "குரு' படத்தில், உயர்ந்த கருத்துக்கள் சொல்லப்படாவிட்டாலும்கூட, கதைக்காக அதில் 5 பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் அதிகபட்சமாக 25 நாட்கள் எடுத்துக்கொண்டேன்.


* பாடல், இசையமைப்பாளர்களுக்காக படங்கள் ஓடின அன்று; இன்று அந்நிலை இல்லையே?


நல்ல இசை இருக்கும் படத்தைத்தான் பார்க்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், இக்கேள்வி எழாது.


* தமிழ் சினிமாவில் முதன்முதலில் "புன்னகை மன்னன்', "விக்ரம்' படங்களில் கணினி இசையை துவக்கி வைத்தீர்கள். அதுவே இன்று ஆக்கிரமித்து உள்ளது. மண்ணின் மரபு சார்ந்த இசை பின்தள்ளப்பட்டு, மேற்கத்திய இசை ஆக்கிரமித்துள்ளதே...,?


கணினிமயமாக இருந்தால் என்ன, எதுவாக இருந்தால் என்ன? உள்ளுக்குள் இருக்கும் இசையை பாருங்கள். எங்கு சென்றாலும், எந்த உயரத்தில் இருந்தாலும், பறந்தாலும் நம் பாதம் தரையில்


பட்டுத்தானே ஆகவேண்டும்.


* இளையராஜாவின் புது "இசை வடிவம்' எப்போது?


எந்த நிமிடத்தில், எப்போது எனது இசை புதிதாக இல்லையோ, அப்போது என்னிடம் கேளுங்கள்.


* இசைக்கும் கைகள், எழுதவும் துவங்கி விட்டதே? இது இசையமைப்பாளர்களால் இயலாத விஷயம். இந்த எழுத்து வல்லமை எப்படி வந்தது?


சினிமா பாடல்களில், ஓரிரு வார்த்தைகளை பல்லவியாக கொடுப்பது வழக்கம். இப்படி, என்னுடன் வேலை செய்த கவிஞர்களுக்கு, பல்லவிகளை கொடுத்திருக்கிறேன். "இதயகோயில்' படத்தில் "இதயம் ஒரு கோயில்...,' பாடலுக்கு மெட்டு ஒத்துவரவில்லை. நானே அந்த பாடலை எழுதினேன்.


அன்றிலிருந்து எழுத்தில் ஆர்வம் பிறந்தது. பன்னிரு திருமுறை, சங்க இலக்கியம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்துப் பார்த்தபின், அடடா..., என்னமாதிரியான இலக்கியங்கள் இருக்கின்றன என வியந்து கற்றேன். ஒரு பாடலை படிக்கும்போது உள்வாங்கும் தன்மை, அதன் ஆழம், விசாலம், எதுகை, மோனை, அழகுணர்ச்சியை இயல்பாக பார்க்கும் தன்மை வாய்த்தால் யாரும் பாடல் எழுதலாம். காட்டு மரம் புல்லாங்குழல் ஆகவில்லையா? குழலாக இருந்தால் அதில் இசை வரவேண்டும். எத்தனையோ பேர், தமிழறிந்து புல்லாங்குழல்கலாக இருக்கிறார்கள் . புல்லாங்குழலில் காற்றை ஊதும்போது, விரல்களை எந்த நேரத்தில் ஏற்றி இறக்க வேண்டும் என்பதை இயக்க ஒருவன் தேவை. அவன்தான் இறைவன். அவனது விரல்களின் ஏற்ற, இறக்கங்கள் என்னுள் பாடலாக, இசையாக, புத்தகமாக வெளிவருகிறது.


இவ்வாறு மனம் திறந்தார்.


மேலும் பல கேள்விகளுக்கு, இசைஞானியின் பதில்கள் புன்னகையே!


-பாரதி, ஜீ.வி.ஆர்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
08-அக்-201314:13:09 IST Report Abuse
p.saravanan எனது ஜீவன் நீதான் என்றும் புதிது .....
Rate this:
Cancel
P.R.KANDASAAMI - DHAKA,வங்கதேசம்
13-நவ-201220:35:57 IST Report Abuse
P.R.KANDASAAMI The great man
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X