சென்னை : சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி - 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது ஜரூராக வசூல் செய்யப்படுவதை அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE