அறியக் கூடிய மாற்றங்கள் - அசோகமித்திரன்

Added : ஆக 22, 2012
Share
Advertisement
அன்று வாரியங்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வரவில்லை. ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் என்பதே போதுமானதாக இருந்தது. நான் முதலில் பேருந்துப் பயணம் செய்த போது, நீல நிறத்தில் இருந்தது. தியாகராய நகரத்திலிருந்து ஐந்து வழித்தடங்களில் பேருந்துகள் ஓடின. சின்ன சின்னப் பேருந்துகள், சற்றுப் பெரிதாகவும் இரண்டு இருந்தன. அவை 11 ஏ என்ற தடத்தில் இயக்கப்பட்டன. இந்த 11 ஏ, பாண்டி பஜார் வழியாக பீச்
அறியக் கூடிய மாற்றங்கள் - அசோகமித்திரன்

அன்று வாரியங்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வரவில்லை. ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் என்பதே போதுமானதாக இருந்தது. நான் முதலில் பேருந்துப் பயணம் செய்த போது, நீல நிறத்தில் இருந்தது. தியாகராய நகரத்திலிருந்து ஐந்து வழித்தடங்களில் பேருந்துகள் ஓடின. சின்ன சின்னப் பேருந்துகள், சற்றுப் பெரிதாகவும் இரண்டு இருந்தன.

அவை 11 ஏ என்ற தடத்தில் இயக்கப்பட்டன. இந்த 11 ஏ, பாண்டி பஜார் வழியாக பீச் ரயில் நிலையம் வரை ஓடும் மிக முக்கியமான வழித்தடம். நீலம் சிவப்பாகி, சில காலம் குழந்தைகள், பொம்மைப் புத்தகங்கள் போலப் பல வண்ணங்களில் ஓடின. சிறிது குழப்பமாக இருக்கும், சென்னை தெருக்களிலேயே நீண்ட தூரப் பேருந்துகளும் ஓடின. எது திருச்சி, எது திருவல்லிக்கேணி என்று சந்தேகமாக இருக்கும். சில காலம் ஏறுமிடத்தில் வழித்தடப் பலகை இருந்தது மிகவும் சவுகரியமாக இருந்தது. அதனாலேயே அது எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.வளர்ச்சியின் ஒரு சின்னம்

: சென்னைப் பேருந்துகள் சென்னையின் வளர்ச்சியின் ஒரு சின்னம். இன்று பிரமாண்டமான பேருந்துகள், நூற்றுக்கணக்கில் வழித்தடங்கள், அப்படியும் ஒரு பேருந்தில் நாற்பது பேர் உட்கார்ந்தால், நூறு பேர் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். ஒரு காலத்தில் நின்று கொண்டே போவதற்கென்று கூட பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று சொகுசு, அதிசொகுசு என பேருந்துகள் ஓடுகின்றன.


பேருந்துகள் பெருக்கம், மூலை முடுக்குகளுக்குப் போகும் வழித்தடங்கள், இதெல்லாம் ஒரு நகரத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. எந்த நாடு அல்லது நகரம் போக்குவரத்தில் சிறப்பாக உள்ளதோ, அது வளர்ந்து வருகிறது என்ற அடையாளத்தைக் கொண்டது.இதர வசதிகள்:

அதே போல் மின் இணைப்பு, குடிநீர் வசதி, இதிலும் சென்னை மிகவும் வளர்ந்திருக்கிறது. இன்று மின்பற்றாக்குறையால் நாம் அரசு மீது கோபம் கொள்ளலாம். ஆனால், மின்சாரம் சென்னையில் வெகு விரிவாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. குடிசை மாற்று வாரியம் சென்னை நகரில் குடிசை என்று ஒன்றைப் பழங்கதையாகிவிட்டது. ஆற்றோரமாக இருப்பவை அனுமதியற்றவை.


சென்னை நகரில் ரேஷன் அட்டையும் தவிர்க்கமுடியாததாகி விட்டது. தெரு விளக்கு நிலைமையும் குறை கூற முடியாது. முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில், "ஆசிரியருக்குக் கடிதம்' பகுதியில் பெரும்பாலும் இந்தக் குறைகள் தான் கூறப்பட்டிருக்கும்.


பாரம்பரியக்குழு என்று ஒன்றிருக்கிறது. இடிந்து விழும் கட்டடங்களை விழவிடாமல் பாதுகாக்க வேண்டும். கோட்டை, கோவில், அரண்மனை என்றால் பரவாயில்லை. ஆனால், வணிகக் கட்டடங்களை அரசு ஏன் பராமரிக்க வேண்டும்?

முன்பு விஸ்தாரமான வெராண்டா இல்லாத வீடே கிடையாது. விசாலமான கொல்லைப்புறம் இருக்கும். இன்று இதெல்லாம் சாத்தியமா? ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். நகர மக்கள் வாழ்க்கை முறை மாறியிருக்கும்போது அதற்குத் தகுந்த படிதான் இருப்பிடம், அலுவல் புரியும் இடம் இருக்க வேண்டும். குட்டிச்சுவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று கோஷம் எழுப்புவது சரியில்லை.


ஆனால், நகரம் அழகாக இருக்க வேண்டாமா? ஒரு நகரத்திற்கு அழகு தருவது எவை?
ஒழுங்காக அமைந்த சாலைகள், ஊர் தட்ப வெட்பத்துக்குப் பொருத்தமான வகையில் கட்டப்பட்ட இருப்பிடங்கள், அலுவலகங்கள், சாத்தியப்பட்ட இடங்களில் தாவரங்கள், பொது இடங்களாக உள்ள இடங்கள் சரியான பராமரிப்புப் பெறவேண்டும். இந்தப் பிரிவில் சென்னை அருங்காட்சியகம், ஓவியக் காட்சிக்கூடம், ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், முதலியன அடங்கும். இவற்றில் சில பாரம்பரியக் கட்டடங்கள், ஏகப்பட்ட விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தியும் இப்போதும் வெற்றிலை பாக்குக் கறைகள் முழுவதும் போகவில்லை. ஆனால், அதிகாலையில் இன்றும் சில சாலைகள் ஓவியங்கள் போல உள்ளன.


சென்னையில் மூன்று நீர் வழித்தடங்கள் இருந்தன. ஆதலால் பாலங்கள் உண்டு. ஐரோப்பிய நகரங்களில் நீர் வழித்தடங்கள் மிக அழகாக இருக்கும். எத்தனை தமிழ்த் திரைப்படங்களில் காதல் ஜோடிகள் இந்த ஆற்றுக்கரையோரமாகவும், பாலங்களிலும் பாட்டுப் பாடி, நடனம் ஆடியிருக்கின்றனர். சென்னைப் பாலங்கள் போக்குவரத்து நெரிசலாலேயே ரசிக்க முடியாது போய்விடுகின்றன.


புறநகர் மின்சார ரயில்:

இன்னும் இருபதுச் சொச்சம் ஆண்டுகளில், புறநகர் மின்சார ரயில் நூறாண்டு விழா கொண்டாடி விடும். இதைச் சென்னையின் வரப்பிரசாதம் என்று கூறினால் மிகையாகாது. மும்பையிலும் மின்சார ரயில், அவ்வளவு மக்களின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தகவல், மும்பையில் நடுநடுவே புது நிலையங்கள் போடுவதில்லை. புறநகர் வண்டிகளில் நிறைய நிலையங்கள் வேகத்தைக் குறைத்து விடுகின்றன.


ஐம்பது ஆண்டுகள் முன், சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் செல்ல நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். இப்போது எழுபது நிமிடங்கள் ஆகின்றன. காரணம், ஐந்து புது நிலையங்கள். இப்போது "பறக்கும் ரயில்' (மேம்பால ரயில்) என ஓடுகிறது. எட்டு மைல்களுக்குள் பதினொரு நிலையங்கள். முன்பு டிராம் வண்டிகளைக் கேலி செய்தனர். அது போன்ற ஏழை வாகனம் இருக்கமுடியாது. இன்று கட்டணமும் அதிகம், வேகமும் மிகக் குறைவு. இதனால், பல நிலையங்கள் பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாது கண்ணீர் விடும்படி இருக்கின்றன. பகல் வேளையிலேயே பெண்கள் அங்கு போக அச்சப்படுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில், இன்னும் இருவித ரயில்கள் வரப்போகின்றன. இவையாவது முன்யோசனையுடன் அமைக்கப்பட வேண்டும்.திரை அரங்குகள் :

ஒரு காலத்தில் சென்னை நகரத்தின் சிறப்புகளில் ஒன்று சினிமா கொட்டகைகள். இன்று "மல்டிப்ளெக்ஸ்' என்று ஒரே கட்டடத்தில் பல திரை அரங்குகள் உள்ளன. ஒரே அரங்கில் ஒவ்வொரு காட்சியும் ஒரு படம். குழப்பமாக இருக்கிறதல்லவா? இப்போது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கொட்டகை சென்று படம் பார்ப்பது அநேகமாக முடங்கிவிட்டது. நூறு நாள் ஓட்டம், ஆறு மாத ஓட்டம் இன்று சாத்தியமில்லை. ஒரு காலத்தில், தமிழ்ப்படங்களின் விளம்பரங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் வராது. இன்று தமிழ்ப் படங்களின் விளம்பரங்கள் அட்டகாசமாக ஆங்கிலப் பத்திரிகைகளில்தான் வெளிவருகின்றன. இந்த மாற்றம் ஆய்வுக்குரியது. நல்ல உயரத்திலிருந்து பார்த்தால் இன்றும் சென்னை நகரம் மிக அழகாக இருக்கிறது. நிறையப் பச்சை தெரிகிறது. எவ்வளவோ மரங்கள் வெட்டப்பட்டு விட்டாலும், இன்றும் வியக்கத்தக்க அளவு பசுமைப் போர்வை இருக்கிறது. இது பாதுகாக்கப்பட வேண்டும்.


கட்டுரையாளர், பிரபல எழுத்தாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X