சென்னை, எனக்கு இரண்டாம் அன்னை. எனக்கு உயர்கல்வி தந்தது, தொழில் தந்தது, புகழ் தந்தது, பொன் தந்தது, பெண் தந்தது எல்லாமே சென்னை தான். என் பிள்ளைகளின் பிறப்பிடம், சென்னை என்று நான் பெருமையோடு பதிவு செய்கிறேன்.
1970ல், தலைநகரத்தில் நான் கால் தடம் பதித்ததுமே, என் மனதிற்குள் சொல்லிக் கொண்ட வாசகம், "இனி சென்னை தான், என் ஊர்' என்பது தான். இப்போது கூட வெளியூருக்கோ, வெளிநாடுகளுக்கோ பறந்து விட்டு, சென்னையின் வான்வெளியை அடையும் போதுதான், மனதிற்குள் நிம்மதி பிறக்கிறது. வானத்தில் பறக்கும் போது, சென்னையை பார்ப்பது ஒரு சுகம். இவ்வளவு அழகான நகரத்தில் நான் வாழ்கிறேன் என்றொரு பெருமிதம்.
5 சிற்றூர்கள்:
இன்றைக்கு, பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் சென்னையின் பழைய அடையாளம், வெறும் ஐந்தே சிற்றூர்கள் மட்டும் தான். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, ஜார்ஜ் டவுன், வேப்பேரி இது தான் சென்னை. இந்த ஐந்து ஊர்கள் நெருங்கியதும், விரிந்ததும் தான் சென்னை. "மதராஸ் ஸ்டேட்' என்று இருந்ததை "தமிழகம்' என பெயர் மாற்றியதற்காக அண்ணாவையும், "சென்னை' என, பெயர் சூட்டியதற்காக கருணாநிதியையும், வரலாறு மறக்காது.
சென்னையின் பழைய பூகோளம் சொன்னால் புல்லரித்துப் போவீர்கள். மேற்கு மாம்பலத்தில் ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரியின் கசிவு நீர், பனகல் பூங்காவில் வந்து வாய்க்காலாகும். பிறகு ஜி.என்.செட்டி சாலையில் கால்வாயாகும், அண்ணாசாலையில் அது நதியாகும். அந்த நதி ராதாகிருஷ்ணன் சாலை வழியே வந்து காந்தி சிலை அருகே கடலில் கலக்கும்!
மறைந்த நதி:
தற்போது, அண்ணாசாலை அருகே உள்ள பார்க் ஓட்டல் முன்பு ஜெமினி ஸ்டூடியோவாக இருந்தது. அதற்கு முன்பு வெள்ளைக்கார விடுதியாக இருந்தது. அந்த வெள்ளைக்கார விடுதியில் நின்று தேநீர் அருந்தியபடியே நதி பறவைகளை வேடிக்கை பார்ப்பாராம் ராபர்ட் கிளைவ். இந்த வரலாறு படித்த போது எனக்கு வியப்பாக இருந்தது. "இது உண்மை தானா?' என்கிற சந்தேகம் வந்தது. அதுவொரு நாள் தீர்ந்தது. ஜி.என்.செட்டி சாலையில் இருந்த கலைவாணர் சிலையை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு மேம்பாலம் கட்டுவதற்காக மண்ணை தோண்டிக் கொண்டிருந்தனர். அந்த வழியே சென்ற நான் காரை ஓரம் கட்டிவிட்டு அந்த மண்ணை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். அது நதிப் படுகையின் மண்தான். அங்கு நதி தான் ஓடிக்கொண்டு இருந்தது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். இன்று அதே நதி ஓடிக் கொண்டிருக்குமேயானால் நதியின் அக்கரையில் முன்னாள் முதல்வர், நதியின் இக்கரையில் இந்நாள் முதல்வர் என்றாகும்! இப்படி நதிகளை, ஏரிகளை, குளங்களை தூர்த்து விட்டுத்தான் சென்னை எழுந்து நிற்கிறது.
கான்கிரீட் காடு:
தேனாம்பேட்டையில் வெள்ளாள தேனாம்பேட்டை என்றொரு இடம் உள்ளது. அங்கு விவசாயம் நடந்திருக்கிறது. வேளாளர்கள் வாழ்ந்திருக்கின்றனர். கழனிக்காடாக இருந்த சென்னை தான் இன்று கான்கிரீட் காடாக மாறியிருக்கிறது. 200 ஆண்டுகளுக்குள் சென்னையின் மொத்த முகமும் மாறித்தான் போய் விட்டது.
பூகோள ரீதியாக சென்னை ஒரு வசதியான நகரம். கடற்கரையில் இருந்து சென்னை அரைவட்டமாக அமைந்துள்ளது. போக்குவரத்து மட்டும் சரியாக இருந்தால், எந்த இடத்துக்கும் 40 நிமிடத்தில் போய்விடலாம். மதுரையிலிருந்து 50 நிமிடங்களில் சென்னையை அடைந்து விட முடிகிறது. ஆனால், விமான நிலையில் இருந்து வீடு வந்து சேருவதற்கு ஒன்றரை மணி நேரம் தேவைப்படுகிறது. இரு சக்கரங்களுக்காக தயாரிக்கப்பட்ட சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களின் நெரிசல் ஊர்வலத்தில் காலவிரயமாகிறது. ஆகவே, காருக்குள்ளேயே ஒரு அலுவலகம் திறக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கொசுக்களும், குப்பையும்:
கொசுக்களும், குப்பையும் சுகாதாரத்தை கெடுத்து, சுற்று சூழலை மாசுபடுத்துகிறன. சென்னை, இந்தியாவிலேயே சிறந்த நகரமாக மாற இரு வழிகள் இருக்கிறன. அதற்கு கொசுக்களையும், குப்பையையும் ஒழித்தாக வேண்டும்.
எனது ஆயுட்காலத்திற்குள்ளாவது சென்னை சிறந்த நகரமாக மாறாதா? என்ற ஏக்கம் வருகிறது. மனிதர்களின் நகரமாக இருக்கும் சென்னை மரங்களின் நகரமாக இருக்கட்டும். எனவே, மரங்களை பாதுகாப்போம். குயில் பாடிய பூங்காக்களை மெட்ரோ ரயில் ஓடுவதற்காக இழந்திருக்கிறோம். இழந்த பூங்காக்களை மீட்டெடுக்க வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகையை மனதில் வைத்து டில்லியை புது டில்லியாக மாற்றி அமைத்ததைப் போல, சென்னையை "புது சென்னை'யாக மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு முதலீடு செய்யும் சர்வதேச நிறுவனங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை நகரத்தின் கட்டமைப்புக்காக கட்டாயம் செலவிட வேண்டும்.
சென்னையை மிகவும் நேசிக்கிறேன்:
எவ்வளவு குறைகள் இருந்தாலும், நான் சென்னையை மிகவும் நேசிக்கிறேன். நானொரு சென்னை வாசி என்பதில் பெருமைப் படுகிறேன். உலகத்தின் எந்த மூலையை சுற்றினாலும், என் மனம் சென்னையை தான் சுற்றிக் கொண்டிருக்கும். சென்னையை பிரிந்து இருக்க முடியாது என்பதை, என் உடம்பு சொல்கிறது. தாய் மண்ணுக்கே சென்றாலும் இதே நிலைமை தான். 10 நாட்களுக்கு மேல் சென்னையை பிரிந்து இருக்க என்னால் முடியாது!
கட்டுரையாளர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்