Chennai Day 373 | வார்த்தைகளால் சொல்ல முடியாத தருணங்கள் - அய்யப்பன் மகாராஜன்| Dinamalar

வார்த்தைகளால் சொல்ல முடியாத தருணங்கள் - அய்யப்பன் மகாராஜன்

Added : ஆக 22, 2012
வார்த்தைகளால் சொல்ல முடியாத தருணங்கள் - அய்யப்பன் மகாராஜன்

இளைஞர்களின் இன்றைய கனவுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தங்களுக்கான இருக்கைகளை தேர்வு செய்து கொள்வதில், அனேகமாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், இதற்கு முந்தைய தலைமுறை வரையில், தேசத்தின் தென்பகுதி மக்களின் கனவுகள், சென்னை என்கிற மாய புத்தகத்தின், புதிரான பக்கங்களில் அடங்கியிருந்தது.

ஒரே நாளில் தன்னை தேடி வந்தவர்களையும், தன்னை விட்டு செல்பவர்களையும் சுமந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சென்னை நகரின் அடிவாரத்தில் நுழைந்த பயண கதையின் முதல்பக்கம், தனது முதல் வார்த்தையை கேள்விக்குறியுடன் துவங்கியது.

சென்னை தந்த அனுபவங்களே, வார்த்தைகளை கட்டிக்கொடுத்தன. சொந்த ஊர் மக்களையும், கதாபாத்திரங்களையும், அங்கிருந்தவரையில், கவனத்தில் கொண்டதேயில்லை. சென்னையின் ஜன்னல் வழியாகவே, ஊரை, மக்களை, மொழியை திரும்ப உணர்ந்து கொண்டேன்.


மனிதர்களை வாரிவாரி இறைக்கும் சென்னை, மொழிகளையும், மக்களையும் ஒன்றாக்கியிருக்கிறது. புதிய மொழியினை உருவாக்குகிறது. ஒரே மனிதர்களை, வேறுவேறு கால கட்டங்களில் சந்திக்கும் தருணம், முழுவதும் வார்த்தைகளால் சொல்ல முடியாதது.


திருவல்லிக்கேணி மேன்ஷன்:

நண்பனின் வற்புறுத்தலால் திருவல்லிக்கேணி மேன்ஷன் அறைக்கு சென்றேன். இரவு முழுவதும் கதைகள்... கதைகள்... கதைகள். மறுநாள் சட்டென்று ஏற்படும் மின் தடை போல, போனவன் திரும்பி வரவேயில்லை. நிறைய பாக்கி வைத்திருப்பான் போல. அறை பூட்டப்பட்டு விட்டது. பெட்டியும், உடைகளும் அறைக்கு சொந்தமாகிவிட்டன. மாற்றுவதற்கு என்னிடம் உடை கிடையாது. குறுக்கெழுத்து போட்டி கட்டங்கள் மாறி,மாறி தாண்டுவது போல, தெருக்களுக்கிடையே, புகுந்து, புகுந்து, ராயப்பேட்டை மேன்ஷனில் ஒருவரை சந்தித்து அங்கு சேர்ந்தேன்.

வழி தவறிய பிள்ளையை கொண்டாடுவதை போல, மேன்ஷன் நண்பர்கள் சுவீகரித்துக் கொண்டார்கள். எனக்கென்று அறை கிடையாது. தினமும் யாராவது ஒருவர் அறையில் தங்கி கொள்ள வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை. முதலாளிக்கோ, மேனேஜருக்கோ, வாட்ச்மேனுக்கோ தெரியாமல் இரவு தங்க வேண்டும். பகலில் கண்ணில் பட்டால் சமாளித்துக்கொள்ளலாம். இரவு ஜாக்கிரதையாக, பின்னிரவுக்கு மேல் தான் நுழைய வேண்டும். பூச்சாண்டி வாழ்க்கை போல இருந்தது. இதற்கெல்லாம் காரணம், மேன்ஷன் முதலாளி. கடுமையான கோபக்காரர். முதலுரையும், முடிவுரையும் கெட்ட வார்த்தைகளிலேயே இருக்கும். இடையில் நம் பெயர் அகப்பட்டு விடக்கூடும். பின்னிரவுக்குமேல் நான் வரும் போது,சில அறைகள் முழித்திருக்கும். மேனேஜர் ஒரு அறையில், அரைத்தூக்கத்தில் இருப்பார். வாட்ச்மேன் வேறுவிதமான தூக்கத்தில், படிக்கட்டு பகுதியில் சொருகியிருப்பார். நொடியில் தப்பிவிடுவேன். பகலில் வேலை தேடுவது. இரவில் அறை தேடுவது. அறை தேடுவதிலேயே ஒரு வருடம் ஓடிவிட்டது.


சிக்கல் உருவானது:

பல தடவை என் உருவம் தென்பட்ட பாக்கியத்தாலோ என்னவோ, முதலாளியில் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. ஒரு வருடம், மேன்ஷனில் வாடகை கொடுக்காமல் தங்கியிருக்கிறான் என்றால் அவருக்கு எப்படி இருக்கும்? எந்த அறை என்று கூட தெரியவில்லை. விசாரணையில் நண்பர்கள் கை விரித்து விட்டனர். இப்போது முதலாளியின், முதல், முடிவு வார்த்தைகளுக்குள் என் பெயர் சிக்கிக்கொண்டது. அவர் உத்தரவு போட, மேனேஜரும், வாட்ச்மேனும் தங்கள் உறக்கத்தை தொலைத்து கையும், களவுமாக பிடிக்க காத்திருந்தனர்.

எலிப்பொறி காத்திருக்கும் விஷயம் தெரியாமல், நடு சாமத்தில் தெருவில் இருந்து விடுபட்ட நான், மேன்ஷனுக்குள் நுழைகிறேன். படிக்கட்டில் ஏறப்போகும் சமயம், உட்புறத்தில் மேனேஜர், அந்நேரத்தில் உட்கார்ந்தபடி என்னை பார்த்துக்கொண்டு இருந்தது, எதையோ அறிவுறுத்தியது. அதற்குள் மாடிக்கு வந்துவிட, அந்த தைரியத்தை நான் பாதுகாப்பாய் உணர்ந்தேன். அதே சமயம், தொடர்ந்து நிறைய காலடி சத்தம். திரும்பினேன். என் நண்பர்கள் வந்து நின்றனர். அனைவருமே சொல்லி வைத்தாற்போல, இன்று எங்கள் அறைக்கு வர வேண்டாம் என்றும், முதலாளிக்கு தெரிந்துவிட்டால், புகலிடம் கொடுத்த குற்றத்திற்காக மொத்த வசூல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதுபோக, அவர் பேச்சுக்கு நடுவில் மாட்டி நோக வேண்டும் என்று கூறிவிட்டு போய்விட்டனர். அறைகள் சாத்தப்பட்டன. வெளியே எட்டிப்பார்த்தேன். வாட்ச்மேன் வாசலை மூடிக்கொண்டு இருந்தார். பொறி இறுகிவிட்டதை உணர்ந்தேன். அடுத்த மாடிப்படியைப் பிடித்து மொட்டை மாடிக்கு வந்தேன். முழு இருட்டு. தனியாக நான். இருபுறமும் படிக்கட்டுகள். எந்த படிக்கட்டு வழியாக சாத்தான் வருவான், எதன் வழியாக தேவன் வருவான் என்று தெரியவில்லை.

இனி எங்கும் ஓடவும் முடியாது. முன்புறத்தில் யாரோ வரும் சப்தம். இருளில் ஒரு உருவம் ஏறிவந்து நிற்கிறது. நான் அப்படியே உறைந்து போய்விட்டேன். இந்த இருட்டுல என்ன பண்ணுறீங்கன்னு, புகைப்படக்கார நண்பன் சினேகிதன் கேட்கிறான். லேசா மூச்சு வர ஆரம்பித்து, அவன் இருளின் அழகு பற்றி பேச ஆரம்பித்துவிட்டான். நான் அவனிடம் நிலமையை புரியைவைக்க முயற்சிக்கிறேன். அவன் அழகை வர்ணிக்கும் நிலையில் இருந்தானே தவிர, கேட்கும் நிலையில் இல்லை. அதற்குள் படிக்கட்டின் மீது பூனை போல் ஒலி எழுப்பாமல் மேனேஜர் வந்து நின்றார்.

""அய்யப்பன பார்த்தியா?''


அவனுக்குப் புரியவில்லை. என்னை உற்றுப்பார்க்கிறான். எனக்கு புரிந்து விட்டது. இருளில் நான் நிற்பது அவருக்கு தெரியவில்லை. சத்தம் எழுப்பாமல் மாடியில் இருந்து நைசாக கீழே இறங்க ஆரம்பித்துவிட்டேன்.


இரவில் எங்கு இருந்தேன். என்ன நடந்தது என, அறிந்து கொள்ள முடியாத மேன்ஷன் வாசிகள், காலையில் தங்கள் தினப்பணிகளை ஆரம்பித்துவிட்டனர். நான் அங்கேயே குளித்துவிட்டு கிளம்பினேன். இனி அங்கு இருக்க முடியாது. ஒரு அறையில் இருந்த, என் பையை எடுத்துக்கொண்டேன்.நிறைய கனம்( கனமான புத்தகங்கள் தான்) இதை வைத்துக்கொண்டு வெளியேறினால் சிரமம். வேகமாக போக முடியாது. விமரிசகனை தேடினேன். அவன் ராம்கோபால் வர்மாவை பற்றி துவக்கியதும், இந்த பையை எடுத்துக்கொண்டு கீழே வந்தால், நீ சொல்வதை நான் கேட்பேன் என்றேன். அவனுக்கு பரமசந்தோசம்.

நான் அம்பு போல் வெளியேறி டீகடையை நெருங்கினேன்.நண்பர்கள் வந்து சேர்ந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். வருத்தம் தெரிவித்தனர். விமரிசகனால் பை மூட்டையை தூக்க முடியவில்லை. சிரமப்பட்டு வந்து சேர்ந்தான். அடுத்த இடம் தேடி நான் நகர்ந்தேன்.பெரிய மனிதர்களாக உயர்வதற்கு:

நாட்கள் நகர்ந்துவிட்டன. வாழ்க்கை நிலையும் மாறிவிட்டது. நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்தில் மேன்ஷன் நண்பன் ஒருவன் நடித்து இருந்தான். "பிரிவியூ'விற்கு கிளம்புகிறோம். காரை மேன்ஷன் பக்கம் நிறுத்தினேன். அறைகளின் நினைவுகளில் இருந்த நான், கதவு திறக்கும் சத்தம் கேட்டு, பார்க்கிறேன். மேன்ஷன் முதலாளி அருகே உட்கார்ந்து இருக்கிறார். நண்பன் அவரையும், படக்காட்சிக்கு அழைத்து இருக்கிறான்.

விவரிக்க முடியா மவுனம் நிறைந்த தருணம் அது. "எப்படி சார் இருக்கீங்க?'' இதை நான் கேட்கவில்லை. மேன்ஷன் முதலாளி தான் கேட்டார். பெரிய மனிதர்களாக உயர்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என, உணர்ந்து கொண்டேன்.

இதுபோல எத்தனையோ மனிதர்கள், சம்பவங்களை சென்னை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், பயணம் துவங்கிய இடத்திற்கே தான் வந்து சேருகிறது. ஆச்சர்யம், நாம் மாறியிருப்போம்.


கட்டுரையாளர் திரைப்பட இணை இயக்குனர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X