அன்னூர்:குடியிருப்பு பகுதியில் "டாஸ்மாக்' மதுக்கடை திறக்க ஊர் பொது
மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அன்னூர் அருகே உள்ள பசூரில் டாஸ்மாக்
மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து, இங்குள்ள இந்தியன் வங்கி அருகே
உள்ள கட்டடத்தை முடிவு செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு, கோவை கலெக்டர் அலுவலகம்
மற்றும் "டாஸ்மாக்' மண்டல அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனு: "டாஸ்மாக்'
மதுக்கடை வைக்க தேர்வு செய்துள்ள இடம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு
அருகிலேயே உள்ளது. இந்த வங்கியில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி
குழுக்கள் வரவு செலவு செய்து வருகின்றனர். அந்த இடத்தை சுற்றிலும்
குடியிருப்புகள் உள்ளன.
எதிர்ப்புறம் கோவில் உள்ளது. எனவே மதுக்கடையால்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக திறக்க
வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர். பசூர் ஊராட்சி துணை தலைவர்
சுகுமார் கூறுகையில்,""குடியிருப்புகளுக்கு நடுவே "டாஸ்மாக்' கடை
திறக்கக்கூடாது என ஊராட்சி சார்பில், எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இதற்காக
ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அனுப்ப உள்ளோம்,''
என்றார்.